மீண்டும் மாற்றப்படவுள்ள அதர்வாவின் புதிய படப்பெயர் ; கடற்கரை ஓரத்தில் ஆபத்தை சந்தித்த படக்குழு
கடற்கரையோரம் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்ற அதர்வா பட சூட்டிங் கடற் கொந்தளிப்பால் நள்ளிரவில் நிறுத்தப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் முரளியின் வாரிசு அதர்வா பாணா காத்தாடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்கான ஜிகர்தண்டா படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். இதுவரை அவரது படங்கள் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை என்றே சொல்லலாம். 14 படங்களுக்கு மேல் நடித்துள்ள அதர்வாவின் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ், நவரசா என அதர்வாவுக்கு வரிசையாக படங்கள் வெளியாக காத்திருக்கின்றனர் .
இதற்கிடையே இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அதர்வா இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடித்த சண்டிவீரன் திரைப்படம் ஏற்கனவே வெளியானது. இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ராஜ்கிரண், ஆர்கே சுரேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து இணைந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எம் ஜி எம் கடற்கரையோரம் நடைபெற்று வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது. பெண்கள் கபடியை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்திற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரை மணல் மீது அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டிற்குள் நேற்று இரவு திடீரென கடல் நீர் புகுந்துள்ளது. இதனால் அச்சமடைந்த படக்குழுவினர் உடனடியாக சூட்டிங்கை நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் ஏற்கனவே அதர்வா படத்திற்காக பட்டத்து அரசன் என்கிற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பெயரில் படக்குழுவினருக்கு பிடித்தம் இல்லாதா காரணத்தால் பெயரில் மாற்றம் செய்ய படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.