பெண் துணை இயக்குனர் ஒருவர் ஆண் நண்பருடன் முழு போதையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை, தள்ளிவிட்டும், எட்டி உதைத்தும் ஏற்படுத்திய பிரச்சனையால் நேற்று சென்னை திருவான்மியூர் ரோட்டின் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று இரவு, சென்னை திருவான்மியூரில் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிவேகமாக ஒரு கார் சென்றுள்ளது. அந்த காரை மடக்கி பிடித்த போலீசார், கார் ஓட்டி சென்றவரை வெளியே வர சொல்லியுள்ளனர். 

அந்த காரில் இருந்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வெளியே வந்துள்ளனர். இருவரும் முழு போதையில் இருந்ததை கண்ட போலீசார் குடி போதையில் வாகனத்தை ஓட்டியதற்காக அபராதம் விதித்துள்ளனர். இதனால் கோவமான அந்த காரில் இருந்த பெண், போலீசாரை எட்டி உதைத்தும், தள்ளி விட்டும் பிரச்சனை செய்துள்ளார்.

இந்த காட்சிகள் அனைத்தும், போலீசாரின் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இருவருமே குடி போதையில் இருந்ததால், அப்போதைக்கு அபராதம் மட்டுமே விதித்து இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து, இன்று காலை போலீசாரை தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்தனர். தனது தாயாருடன் காவல் நிலையத்திற்கு வந்து இருந்த அந்த பெண்ணின் பெயர் பெயர் காமினி என்றும் இவர் திரைப்பட உதவி இயக்குனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் நேற்றிரவு காரில் வந்தவர் இவருடைய ஆண் நண்பர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது .

ஆபாசமாக பேசி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண் துணை இயக்குனர் காமினியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.