கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பொது இடங்களில் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலை, பீச், விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. பைக் ரேஸ் உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் நேற்று 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். 


இதனால் மக்கள் அனைவரும் நேற்று நள்ளிரவில் தங்களது வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாடினர். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நண்பர்களுடன் வீட்டில் புத்தாண்டு கொண்டாடிய உதவி இயக்குநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காட்டில் சின்னத்திரை உதவி இயக்குநர் ருத்ரன் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடியுள்ளார். 

 

இதையும் படிங்க: அஜித், தனுஷ், ஜோதிகா, பார்த்திபனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... உற்சாகத்தில் ரசிகர்கள்...!

அப்போது அவர் உட்பட உதவி இயக்குநர்கள் 4 பேர் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர்.  போதை அதிகமான நிலையில் புகைப்பிடிக்கும் போது ஏற்பட்ட மோதலால் ருத்ரன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் ருத்ரனை கத்தியால் குத்திக் கொன்றதாக சக உதவி இயக்குநரான மணிகண்டன் என்பவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.