நேற்று ரிலீஸான சூர்யா, செல்வராகவன் கூட்டணியின் ‘என்.ஜி.கே’, பிரபு தேவா, தமன்னாவின் ‘தேவி 2’ ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிசில் படு தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அவ்விரு படங்களையுமே தமிழ் ராக்கன்ஸ் இணையதளம் கடமை வீரன் கந்தசாமி போல் துல்லியமான டிஜிட்டல் பிரிண்டில் வெளியிட்டு தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலை வாரிக்கட்டிக்கொண்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒன்றரை வருடங்களுக்கும் மேல் தயாரிப்பில் இருந்த படம் என்.ஜி.கே. ‘படம் முடியிறதுக்குள்ள ஒரே ஒரு நல்ல சீனாவது வந்துராதான்னு ஏங்கிப்போயிட்டோம். ஆனா கடைசிவரை அப்படி ஒரு சீன் கூட வரலை’ என்று சூர்யா ரசிகர்களைப் புலம்பவைத்த படம். ஆனால் டைரக்டர் செல்வராகவனோ இன்னும் பிடிவாதமாக படத்தில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. திரைரை ரசிகன் இன்னும் நெருங்கும்போது அந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படும்’என்று உதார் விட்டுக்கொண்டிருக்கிறார்.

அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ளும் அதீத ஆர்வத்திலோ என்னவோ தமிழ் ராக்கன்ஸ் ஒரு தரமான டிஜிட்டல் பிரிண்டில் படத்தை நேற்று இரவே வெளியிட்டுவிட்டார்கள். இன்னொரு கொடுமைப் படமான ‘தேவி 2’வில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா கோஷ்டிகளை வைத்துக்கொண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் அடித்த கூத்துக்களை சகித்துக்கொள்ள முடியாமல் தியேட்டரில் ஒரு ரசிகர் அடித்த கமெண்ட், ‘டேய் மாப்ள இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ்ல கூட பாக்கமுடியாது’என்பது. சென்னை ரசிகனின் குரல் அவனுகளுக்கு எப்படிக் கேட்கும். விபரீதம் புரியாமல் ‘தேவி 2’ படத்தையும் நேற்றே தமிழ் ராக்கர்ஸில் வெளியிட்டுவிட்டார்கள்.