விஷால், ஆர்யா நட்பு குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இருவருக்குமிடையேயான நட்பு, கோலிவுட்டில் அனைவரும் அறிந்த செய்தி. இந்நிலையில் தனது ஆருயிர் நண்பன் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா மாற உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது. "ஆக்‌ஷன்" படத்தை தொடர்ந்து, அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்க விஷால் ஒப்புக்கொண்டுள்ளார். 

இரு ஹீரோ சப்ஜெட்டான இந்தப் படத்தில் விஷால் நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், வில்லனாக யாரை நடிக்கவைப்பது என்ற குழப்பம் படக்குழுவினர் இடையே நிலவியது. வழக்கம் போல ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இடையே நடக்கும் மோதல் தான் கதை என்பதால், கெட்டவன் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான ஹீரோவை தேடி வந்தனர். இந்நிலையில் விஷாலை எதிர்த்து சண்டை போட அவருடைய நண்பர் ஆர்யாவை களம் இறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் இரும்புத்திரை. அந்த படத்தில் முதலில் வில்லனாக நடிக்க ஆர்யாவை அனுகியதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் நடிக்க ஆர்யா மறுத்ததை அடுத்தே அர்ஜூன் வில்லனாக நடித்தார். இப்படத்தில் தனக்கு வில்லனாக ஆர்யா நடித்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று எண்ணிய விஷால், அவரே ஆர்யாவிடம் பேசி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தமிழில் முதல் முறையாக ஆர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு பொருத்தமான ஹீரோயினை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே இயக்குநர் பாலாவின் "அவன் - இவன்" படத்தில் விஷாலும், ஆர்யாவும் அண்ணன், தம்பியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.