இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் 'சல்பேட்டா' படத்தின் நாயகி யார் என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆர்யா தன்னுடைய மனைவியுடன் மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள 'டெடி'  படத்தில் நடித்து முடித்த கையோடு, ஆர்யாவின் 30வது படமாக உருவாகும் 'சல்பேட்டா' படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்த படத்தை 'மெட்ராஸ்', 'காலா', 'கபாலி' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். கே 9 ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. ஆர்யா, இப்படத்தில்...  வடசென்னை வாலிபராகவும், பாக்ஸராகவும் நடிக்கிறார்.

இந்த படம் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நாயகியை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பிரபல மாடலும், நடிகையுமான துஷாரா விஜயன் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் கடந்த வருடம், தமிழில் வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் தமிழில் அறிமுகமானவர். வட சென்னை பெண்ணாகவே இவர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கலையரசன், சந்தோஷ் பிரதாப், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில், இப்படம் உருவாகிறது. இந்த படத்திற்காக மிகவும் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஆர்யா மாறியுள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.