அன்னை தெரசாவாக ஆசைப்படும் கேதரின் தெரசா தொடர்ந்து ஐந்து கொலைகளைச் செய்கிறார் என்று ஒரு ஒன்லைனைச் சொன்னால் சிலிர்க்கிறது அல்லவா ஆனால் அதையே சலித்துப்போகும் அளவுக்குச் சொல்லியிருக்கும் படம் தான் சித்தார்த் நடித்திருக்கும் ‘அருவம்’.

’அரண்மனை 2’, ’அவள்’ படங்கள் மாதிரியான ஒன்றாக வரும் என்ற நம்பிக்கையில் சித்தார்த் தலையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவர் கொடுத்திருக்கும் விலை என்ன என்பதை தெரிந்துகொள்ளுமுன் கதையைப் பார்ப்போம். 

சாலையில் எறும்புகள் ஊர்ந்துபோனால் கூட அவற்றிற்கு வழிவிட்டு நிற்கும் அன்னை தெரசாவின் மறு உருவம் போல அன்பு, கருணை, சமூக சேவை என வாழ்ந்து வரும் பள்ளி ஆசிரியை ஜோதி என்ற பாத்திரத்தில் கேதரின். அவரின் வித்தியாசமான கேரக்டரை தொடர்ந்து கவனிக்கும் சித்தார்த் சட்டென காதலில் விழுகிறார். ஜோஸியக்காரரிடமிருந்து கிளியை சுதந்திரமாக பறக்கவிடும் மகா மாடர்ன் காட்சிகளையெல்லாம் வைத்திருக்கிறார் இயக்குநர் சாய் சேகர்.

இன்னொரு பக்கம் உணவுத்தரக் கட்டுப்பாடு அதிகாரியாக கறார் காட்டும் சித்தார்த் பல்வேறு தொழிலதிபர்களைப் பகைத்துக்கொள்கிறார். அவரது மேலதிகாரியின் சதியுடன் சித்தார்த் தீர்த்துக்கட்டப்படுகிறார். யெஸ் உங்கள் யூகம் சரிதான். அப்புறம் வழக்கம்போல் தமிழ் சினிமா ஃபார்முலாப்படி கேதெரின் தெரசாவின் உடலுக்குள் புகுந்து பழிவாங்குகிறார்.

முதல் பாதியில் காரண காரியமில்லாமல் குடிகாரகள், பலான பார்ட்டிகள் மற்றும் படம் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்த முயலும் சித்தார்த்தின் ஆவி இடைவேளைக்குப் பின் தான் வில்லன்களைப் பழி வாங்குகிறது.

தமிழில் படங்களைத் தேர்வு செய்வதில் அடிக்கடி கோட்டைவிடும் இப்படத்திலும் அதே காரியத்தை செவ்வனே செய்திருக்கிறார். நல்ல உணவே என் கனவு என்று மிடுக்கு காட்டும் இடங்களெல்லாம் சுத்தமாக எடுபடவில்லை. கேதரின் தெரசா தெலுங்கிலேயே செட்டில் ஆகிவிடுவதுதான் தமிழ் ரசிகர்களுக்கு நல்லது.

வில்லன் பாத்திரங்கள் அத்தனையும் ஏற்கனவே நூற்றுக்கணக்கான படங்களில் பார்த்துச் சலித்தவை. இசை,ஒளிப்பதிவு போன்ற தொழில் நுட்பங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’படத்தில் கொஞ்சூண்டு சம்பாதித்த நல்ல பெயரை ஒட்டுமொத்தமாக இந்த ஒரே படத்தில் பறிகொடுத்திருக்கிறார் சித்தார்த். அருவம் அல்ல அறுவை.