நடிகர் அர்ஜூனை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாக அவர் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது பெங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நிபுணன் படப்பிடிப்பின் போது நெருக்கமான காட்சிகளில் நடிகர் அர்ஜூன் அத்துமீறியதாக ஸ்ருதி கூறியிருந்தார். காட்சியில் கூறாதநிலையில் தனது பின்னழகில் அர்ஜூன் கை வைத்ததாகவும் அதற்கு தான் உடன்படாத காரணத்தினால் படப்பிடிப்பின் போது தன்னை மிகவும் ஹரஸ் செய்ததாகவும் ஸ்ருதி தெரிவித்திருந்தார். 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அர்ஜூன் ஸ்ருதியிடம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதுமட்டும் அல்லாமல் நடிகர் அர்ஜூன் சார்பில் பெங்களூர் மாநகர காவல்துறையில் நடிகை ஸ்ருதிக்கு எதிராக புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் தன்னை பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு தன்னிடம் பணம் பறிக்க ஸ்ருதி முயற்சி செய்ததாக அர்ஜூன் கூறியுள்ளார். 

மேலும் நடிகை ஸ்ருதியுடன் வேறு சிலரும் சேர்ந்து தனக்கு எதிராக மிகப்பெரிய சதி செய்துள்ளதாகவும் கூறி சில ஆவணங்களையும் அர்ஜூன் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மேலும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு தன்னை பற்றி அவதூறு பரப்பப்பட்டதாகவும், இதற்கும் நடிகை ஸ்ருதிக்கும் தொடர்பு இருப்பதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. 

இதனை தொடர்ந்து நடிகர் அர்ஜூனின் புகார் பெங்களூர் சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. உடனடியாக நடிகை ஸ்ருதிக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், அர்ஜூனுக்கு எதிராக குற்றச்சதி செய்தல், மிரட்டுதல், ஏமாற்றுதல் என பல பிரிவுகளில் ஸ்ருதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.