இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து டிசம்பர் 31,2014ம் ஆண்டுக்குள் இந்தியா வந்த முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி செய்யும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா அமலுக்கு வந்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் லண்டன் செல்லும் விமான டிக்கெட்டில் முழுப்பெயரும் தெரியும் படி,  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

அதன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் பெயருக்கு முன்புள்ள ஏ.ஆர். என்பதன் விளக்கம் அல்லா ரக்கா என்று பலருக்கும் தெரியவந்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் ஏ.ஆர்.ரகுமான் ஏன் தனது முழுப்பெயரையும் டுவிட்டரில் பதிவிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழா, தமிழா பாடலை வெளியிட்டு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கும் நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்பாமல், மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் இந்த டுவிட்டர் பதிவை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.