இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் 'பொன்னியின் செல்வன் 2' படத் தயாரிப்பாளர்களுக்கு எதிரான பதிப்புரிமை வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Ponniyin Selvan 2 song case : 2023-ல் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'வீரா ராஜ வீரா' பாடல், ஜூனியர் தாகர் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் மறைந்த உஸ்தாத் என். ஃபயாசுதீன் தாகர் மற்றும் உஸ்தாத் ஜாஹிருதீன் தாகர் ஆகியோர் இயற்றிய சிவ ஸ்துதியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில், பதிப்புரிமை மீறப்பட்டதாகக் கூறப்படும் 'வீரா ராஜ வீரா' பாடல், அசல் பாடலின் மையக் கருத்தை தழுவியது மட்டுமல்லாமல், ஒரு சாமானியரின் பார்வையில், பாடலின் மெட்டும் உணர்வும் சிவ ஸ்துதியைப் போலவே உள்ளது. எனவே, இது மனுதாரரின் உரிமைகளை மீறியுள்ளது என்று தனி நீதிபதி முன்பு கூறியிருந்தார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான உத்தரவு ரத்து
1970-களில் 'ஜூனியர் தாகர் பிரதர்ஸ்' என்று அழைக்கப்பட்ட தனது தந்தையும் மாமாவும் சேர்ந்து இந்த சிவ ஸ்துதியை இயற்றினர் என்று உஸ்தாத் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் வாதிட்டார். 1989 மற்றும் 1994-ல் தனது தந்தை மற்றும் மாமாவின் மறைவுக்குப் பிறகு, சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப உடன்படிக்கையின் மூலம் பதிப்புரிமை தனக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார். தனது அறிவோ, அனுமதியோ இல்லாமல் ஏ.ஆர். ரகுமான் இந்தப் பாடலைப் படத்தில் பயன்படுத்தியதாக உஸ்தாத் ஃபயாஸ் வாசிபுதீன் தாகர் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் ஏப்ரல் 25 அன்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மறைந்த உஸ்தாத் என். ஃபயாசுதீன் தாகர் மற்றும் உஸ்தாத் ஜாஹிருதீன் தாகர் ஆகிய ஜூனியர் தாகர் சகோதரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில், அனைத்து ஓடிடி மற்றும் ஆன்லைன் தளங்களிலும் படத்தின் ஒரு ஸ்லைடைச் சேர்க்க வேண்டும். ரகுமானும் படத் தயாரிப்பாளர்களும் பதிவகத்தில் 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், உஸ்தாத் ஃபயாஸ் வாசிபுதீன் தாகருக்கு நீதிமன்ற செலவாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரகுமான் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் சி. ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்பால் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பதிவகத்தில் 2 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
