’பிக்பாஸ் சீஸன் 3’ துவங்க இன்னும் சரியாக மூன்று வாரங்களே உள்ள நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தன்னைப்பற்றி வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மை என்று மகிளா காங்கிரஸின் தேசியச் செயலாளர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

விஜய் டி.வியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீஸன் வரும் ஜூன் 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி நிறுவனமோ இதுவரை அதில் கலந்துகொள்ளவிருக்கும் விருந்தினர்களில் பட்டியலில் நகைச்சுவை நடிகை மதுமிதா பெயரை மட்டுமே வெளியிட்டுள்ள ஊடகங்கள் ஒரு யூகப் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டவண்ணம் உள்ளனர்.

அச்செய்திகளில் இம்முறை விருந்தினர்கள் பட்டியலில் திருநங்கை ஒருவர் கலந்துகொள்கிறார் என்றும் அவர் அநேகமாக மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் அப்சரா ரெட்டியாக இருக்கக்கூடும் என்ற செய்திகள் அநேக ஊடகங்களில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் அச்செய்தியை தனது ட்விட்டர்  பக்கத்தில் மறுத்திருக்கிறார் அப்சரா. அது குறித்த தனது பதிவில்,... இம்முறை தொடங்கவுள்ள பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவிருப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை. பிக்பாஸ் முதல் சீஸனுக்கே எனக்கு அழைப்பு வந்த போதே அதை மறுத்து விட்டேன். ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. நான் மதிக்கும் சில ஊடகங்களே என்னைக் கேட்காமல் இத்தகைய செய்திகளை வெளியிடுகிறார்கள். இதுபோன்ற தவறான செய்திகளைத் தவிருங்கள்’ என்று பதிவிட்டிருக்கிறார்.