’படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. வருடத்துக்கு ஒரே ஒரு படம் நடித்தாலும் அது பேர் சொல்லும் படமாக இருக்கவேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்கிறார் குட்டி நயன்தாரா என்று ‘சர்வ தாளமயம்’ குழுவினரால் செல்லமாக அழைக்கப்படும் அபர்ணா பாலமுரளி.

’யாத்ரா தொடருன்னு’ மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமாகி ‘மகிஷிண்டே பிரதிகாரம்’ மூலம் பிரபலமானவர் அபர்ணா பாலமுரளி .’எட்டு தோட்டாக்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் எட்டு வைத்து  தற்போது ’சர்வம் தாள மயம்’ படத்தின் மூலம் ராஜீவ் மேனனின் நாயகியாகியிருக்கிறார். படப்பிடிப்பில் பெரும்பாலும் சிங்கிள் டேக்கில் ஓகே செய்த இவரை யூனிட்டில் குட்டி நயன்தாரா என்றே ஓட்டி வந்தார்களாம்.

அபர்ணா மிகவும் எதிர்பார்க்கும் சர்வம் தாளமயம்’ நாளை வெளியாக உள்ள நிலையில்,’’எந்த மொழி படமாக இருந்தாலும் அதில் என் கதாபாத்திரம் வலுவாக இருக்கவேண்டும். அப்படிதான் ’மகேஷிண்டே பிரதிகாரம்’, `எட்டு தோட்டாக்கள்’ தொடங்கி இப்போது `சர்வம் தாள மயம்‘ படம் வரை என்னோட கதாபாத்திரம் பார்த்துதான் படத்தை தேர்வு செய்து வருகிறேன்.

‘சர்வம் தாள மயம்’ படம் ஆசிரியர் - மாணவர் உறவை பேசும் படம். அதனால் என் கதாபாத்திரத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்காது. படம் முழுக்க வர மாட்டேன். ஆனால் சில காட்சிகளில் வந்தாலும் அது படத்துக்கு முக்கியமானதாகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும்.

மலையாள படங்களில் நடிக்கும்போது நான் எவ்வளவு குண்டாக, பப்ளியாக இருந்தாலும் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். என் இயக்குனர்களும் அதை பற்றி எதுவும் சொல்வது இல்லை. ஆனால், நான் தமிழ்ப் படங்களிலோ அல்லது வேற மொழிப் படங்களிலோ கமிட்டாகும்போது நான் உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதுக்காகத்தான் தற்போது ஜிம்முக்கெல்லாம் போய் உடம்பை குறைச்சிட்டு இருக்கேன். மலையாளத்தில் நிறைய பாடல்கள் பாடியிருக்கேன். தமிழில் `எட்டு தோட்டாக்கள்’ படத்தில் கூட பாடியிருக்கேன். அப்பா, அம்மா இரண்டு பேருமே இசைக்கலைஞர்கள் தான். எதிர்பாராமல்தான் நடிக்க வந்தேன். எப்பவுமே இசைக்குக்குதான் முன்னுரிமை கொடுப்பேன் என்கிறார்.

தற்போது மலையாளத்தில் ‘ஆடு ஜீவிதம்’ ,’ஜீ பூம் பா’,’ஆனந்தமார்கம்’ ஆகிய படங்களிலும் தமிழில் ‘தீதும் நன்றும்’ படத்திலும் நடித்து வருகிறார் அபர்ணா.