அருந்ததி படத்தின் வெற்றிக்குப்பிறகு ஹீரோயினை மையப்படுத்திய கதைகளை அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார் அனுஷ்கா. 

அவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'பாகமதி' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனினும் மனம் தளராக அனுஷ்கா, அடுத்து ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் 'நிசப்தம்' படத்தில் நடித்துள்ளார். 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என  5 மொழிகளில் தயாராகிறது.  நிசப்தம் படத்தில், சாக்ஷி என்ற கேரக்டரில் வாய்பேசாத காது கேளாத ஓவியராக அனுஷ்கா நடித்துள்ளார். 

அந்தோணி என்ற கேரக்டரில் பார்வையற்ற இசைக்கலைஞராக மாதவன் நடித்துள்ளார். அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 
5 மொழிகளில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் டீசர், வரும் நவம்பர் 6ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், படத்தின் டீசரை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகைச் சேர்ந்த 3 பிரபல இயக்குநர்கள் வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இயக்குநர்கள் வேறுயாருமல்ல. அனுஷ்காவின் நண்பர்களான கவுதம் மேனன், பூரி ஜெகன்நாத், நீரஜ் பாண்டே ஆகியோர்தான். தமிழ் டீசரை கவுதம் மேனனும், தெலுங்கில்  பூரி ஜெகன்நாத்தும், இந்தி டீசரை நீரஜ் பாண்டேவும் நவம்பர் 6-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

 
'பாகுபலி' படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்குப் பிறகு, அனுஷ்கா நடித்த எந்தவொரு படமும் வெற்றியடையவில்லை. இதனால், நிசப்தம் படத்தை அனுஷ்கா மிகவும் நம்பியுள்ளார்.  அதற்கேற்றாற்போல், படத்தை எப்படியும் வெற்றிப்படமாக்கிட வேண்டும் என படக்குழுவும் தீவிரமாக இறங்கியுள்ளது. 

அதன் ஒருபகுதியாக, படத்தின் டீசரை, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமான இயக்குநர்களை வைத்து படக்குழு வெளியிடுகிறதாம். வரும் நவம்பர் 7ம் தேதி அனுஷ்காவின் பிறந்தநாள் என்பதால், ரசிகர்களுக்கும் 'நிசப்தம்' டீசர் சிறந்த ப்ர்த்டே ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.