நடிகைகளின் கண் வீச்சில் ஏற்கனவே பல கிரிக்கெட் வீரர்கள் க்ளீன் போல்ட் ஆகியுள்ள நிலையில் தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா மலையாள நடிகை அனுபமாவின் காதல் வலையில் விழுந்து விட்டதாக சமீபகாலமாக அதிக செய்திகள் நடமாடி வருகின்றன. அச்செய்திகளை கொஞ்சமும் கோபமின்றி மறுக்கிறார் அனுபமா.

யாக்கர் மன்னன் என்றழைக்கப்படும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்திய அணிக்கு தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இருந்த குறையை பும்ரா போக்கியுள்ளார் என்றே சொல்லாம். ஐசிசி பவுலர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கும் மலையாள நடிகை அனுபாமாவிற்கும் காதல் மலர்ந்துள்ளதாக  கடந்த சில வாரங்களாகவே கிசுகிசுப்படுகிறது.

நடிகை அனுபாமா நிவின் பாலி நடித்த ’பிரமேம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். தமிழில் தனுஷூடன் சேர்ந்து ’கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்த படத்திலும் நடிக்கவிட்டாலும் தெலுங்கிலும், மலையாளத்திலும் அனுபமா பிஸியாக உள்ளார். இன்னொரு பக்கம் துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படத்தில் கதாநாயகியாக நடித்துக்கொண்டே உதவி இயக்குநர் வேலையும் பார்க்கும் செய்தியையும் சமீபத்தில்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு உற்சாகமான தொனியில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் பும்ரா - அனுபமா இருவருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்க காரணமாக அமைந்துள்ளது அவர்களின் ட்விட்டர் பக்கம் . ட்விட்டரில் பும்ரா ஃபாலோ செய்யும் 25 பேர்களில் அதிகம் பேர் கிரிக்கெட் வீரர்கள். மற்றவை கிரிக்கெட் தொடர்புடைய பக்கம். அவர் ஃபாலோ செய்யும் ஒரே நடிகை அனுபமா மட்டுமேதான். அனுபமாவும் தனது ட்விட்டரில் பும்ராவை ஃபாலோ செய்கிறார். மேலும் அவர் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் லைக் செய்து, அதை ஷேர் செய்து வருகிறார் என்பது அவர்கள் பற்றிய வதந்திகளுக்கு ஆதாரமாக இருந்தது.

இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு எண்ணெய் ஊற்றி எரிய விடும் வகையில், ‘நாங்கள் காதலிக்கவில்லை. வெறுமனே நண்பர்கள்தான்’ என்று செய்திகளுக்கு கொஞ்சமும் கோபப்படாமல் பதில் சொல்லிவருகிறார் அனுபமா. ஸோம் உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்த நட்பு காதலாகும் வாய்ப்பே அதிகம் தெரிகிறது.