இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத ரஜினி, ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இசைப்புயல் ரகுமான் இசையமைக்க மறுத்ததால் ‘பேட்ட’ பாய் அனிருத்தே மறுபடியும் சூப்பர் ஸ்டார் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் என்று தகவல்கள் வருகின்றன.

‘பேட்ட’ படத்துக்கு அடுத்தபடியாக ரஜினி ‘சர்கார்’ பட இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக 99 சதவிகித செய்திகள் உறுதி செய்கின்றன. துவக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இப்படத்தை இரு தினங்கள் முன்பு வரை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் ‘2.0’ தொடர்பான ஒரு மனக்கசப்பால் ரஜினி இந்நிறுவனத்தைத் தவிர்க்கக்கூடும் என்று தெரிகிறது.

ஆனால் முருகதாஸிடம் தயாரிப்பாளர் யார் என்பது குறித்து கவலைப்படாமல் வேலையை மட்டும் துவங்கும்படி ரஜினி சொல்லியிருப்பதாகவும் அதன்படி முருகதாஸ் எந்த நிறுவனத்திலும் அட்வான்ஸ் வாங்காமல் கதை விவாதத்தில் அமர்ந்துவிட்டதாகவும்  தெரிகிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட இப்படத்தில் பணியாற்ற அவர் விருப்பம் தெரிவிக்கவில்லையென்றும் அவருக்குப் பதிலாக ரஜினியின் சிபாரிசின் பேரில் ‘பேட்ட’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒல்லிப்பிசாசு அனிருத்தே இசையமைக்கவிருப்பதாக நம்பகமான செய்திகள் நடமாடுகின்றன.