இதுவரை தற்கொலைக்கு எவ்வளவோ காரணங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த தமிழ் சினிமா இயக்குநரின் தற்கொலைக்கான காரணத்தைக் கேள்விப்படும்போது நண்பர்கள் இவரைக் காப்பாற்றாமலேயே விட்டிருக்கலாமோ என்று உங்களுக்கும் தோன்றினால் நீங்கள் ஒரு நல்ல சங்கீத ரசிகர்.

’பையா’, ‘பீச்சாங்கை’ படங்களில் வில்லனாக நடித்து ‘சோமபான ரூபசுந்தரம்’ என்ற இதுவரை கேள்வியேபட்டிராத படத்தின்மூலம் இயக்குநராகியிருப்பவர் பொன்முடி. ‘பிக்பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும், விஷ்ணுப்ரியனும் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படம் மதுவின் கொடுமையை இம்மண்ணுக்கு எடுத்துச்சொல்லும் படமாம்.

இப்படத்தைத் துவங்கும்போது இசையமைப்பாளர் காந்தக்குரலோன் அனிருத்தை இப்படத்துக்கு ஒரு பாடலைப் பாடவைத்து, அந்த ஒரு பாடலை வைத்தே எல்லா ஏரியாவையும் விற்றுத் தீர்த்துவிடலாம் என்று தனது தயாரிப்பாளருக்கு உத்தரவாதம் தந்திருக்கிறார் பொன்முடி.
இதை ஒட்டி தனது இசையமைப்பாளர் அப்பாஸ் ரவி மூலம் அனிருத்தை தொடர்புகொள்ள பொன்முடி தொடர்ந்து முயற்சிக்க, அனிருத் இவர்கள் கையில் சிக்கவே இல்லை. இறுதிக்கட்ட முயற்சிகளின்போது,’நான் இப்ப படுபிஸியா இருக்கேன். அடுத்த படத்துல பாக்கலாம்’ என்று கையை விரித்துவிட்டார்.

இதைக்கேட்டு நொந்துபோன தயாரிப்பாளர் 80 சதவிகிதம் முடிந்த படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார். முதல் படமே முக்கால் படமாக நின்றதால் மனம் வெறுத்துப்போன பொன்முடி ஏகப்பட்ட தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயல, தகவல் அறிந்த நண்பர்கள் அவரை மருத்துவமனை தூக்கிச்சென்று காப்பாற்றியிருக்கிறார்கள்.

‘படத்திற்கு முக்கிய அடையாளம் என்று நான் நம்பிய அந்தப்பாடலை அனிருத் பாடியிருந்தால் என் படமும் சிக்கலின்றி முடிந்திருக்கும். நானும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கமாட்டேன்’ என்கிறார் இயக்குநர் பொன்முடி.

வலைதளங்களில் வைரலாகப் பரவிவரும் இச்செய்தியின் பின்னூட்டங்களில்... அனிருத் பாடாத காரணத்துக்காகத்தான் அந்த டைரக்டர் தற்கொலை முயற்சியில இறங்குனது உண்மையின்னா அவரைக் காப்பாத்தாமலே விட்டிருக்கலாம்’ என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.