’வரவிருக்கிற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாக நடிகை ஏஞ்சலினா ஜோலி ஒரு பேட்டியில் கூறி அதிபர் ட்ரம்புக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது [கேர்ள் இண்டெர்ரப்டட்] உட்பட பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள ஏஞ்சலினா தனது செக்ஸியான நடிப்பால் உலகம் முழுக்க உள்ள இளைஞர்களின் தூக்கம் கெடுத்தவர்.  ஐக்கிய நாடுகளின் சபையில் அகதிகளுக்கான தூதராகவும்  பணியாற்றி வருகிறார். 

கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் பசியால் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார். பல குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்க்கிறார்.  இவ்வாறு ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல், பல சமூக நற்பணிகளையும் செய்து வரும் ஏஞ்சலினா ஜோலி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று முன் தினம்  கலந்து கொண்டார்.

அப்போது, அரசியலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறதா..? என்று தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஏஞ்சலினா, ”20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கேள்வியை என்னிடம் எழுப்பியிருந்தால் நான் நிச்சயம்  சத்தம் போட்டுச் சிரித்திருப்பேன்; எனக்கான தேவை எங்கிருக்கிறதோ அங்கு நான் செல்வேன் என்று எப்போதும் சொல்வேன். ஆனால், அரசியலுக்கு நான் ஏற்றவளா என்று தெரியவில்லை.

என்னால், அரசு மற்றும் ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்ற முடியும் என்றால், அதைவிடப் பெரிய காரியங்களைச் சாதிக்கும் ஒரு இடத்தில் என்னால் அமர முடியும். எனினும், தற்போதைக்கு அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்” என்று கூறினார்.

அடுத்து இறுதியாக 2020ல் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பட்டியலில் உங்களது பெயரை சேர்க்கலாமா..?  என்ற கேள்வியை தொகுப்பாளர் முன்வைத்தார். இதற்கு சிரித்த முகத்துடன் ‘யெஸ்’ என்று சொன்னார் ஏஞ்சலினா.

பல வருடங்களாகவே சிறந்த சமூகசேவகியாகவும் திகழும் ஏஞ்சலினா போட்டியிட்டால் அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கும்.