இன்று காலைக்காட்சிகள் மட்டும் ரத்து என்று சற்றுமுன்னர் வரை அறிவிக்கப்பட்டு வந்த அமலாபாலின் ‘ஆடை’படத்தின் அத்தனை காட்சிகளும் தமிழகம் முழுவதும் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் இதே நாளில் ரிலீஸான விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’படம் வழக்கம்போல் விக்ரம் ரசிகர்களைக் கூட திருப்திப்படுத்தவில்லை என்று தெரிகிறது.

இன்று வெள்ளியன்று மோதவிருந்த இருபடங்களில் ஒன்றான அமலாபாலின் ‘ஆடை’பட ரிலீஸ் அடுத்த தேதி அறிவிப்பின்றி சற்றுமுன்னர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஃபைனான்சியருக்கு செலுத்த வேண்டிய தொகையை தயாரிப்பாளர் செட்டில் செய்யாமல் இருந்த நிலையில் முதலில் காலைக் காட்சிகள் மட்டும் ரத்து செய்யப்பட்டு பஞ்சாயத்து நடந்து வந்தது. ஆனால் மதிய உணவு இடைவேளை வரை நடந்த பேச்சு வார்த்தைகளில் சுமுக நிலை எட்டப்படாததால் அடுத்த தேதியை அறிவிக்காமல் பஞ்சாயத்தார் கலைந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது. இதனால் அமலா பாலின் ‘ஆடை’ தரிசனத்துக்காக காத்திருந்த வாலிப வயோதிக அன்பர்கள் பயங்கர அப் செட் ஆகியிருக்கிறார்களாம்.

இன்னொரு பக்கம் தனிக்காட்டு ராஜாவாகக் களம் கண்டிருக்கும் ‘கடாரம் கொண்டான்’படம் விக்ரம் ரசிகர்களையே ஈர்க்கவில்லை என்றே முகநூல்களில் வரும் விமர்சனங்களை வைத்து முடிவுக்கு வரமுடிகிறது. ஏற்கனவே கமலை வைத்து ‘தூங்காவனம்’படத்தையே ஒரு ஃப்ரெஞ்ச் பட டிவிடியிலிருந்து சுட்ட இயக்குநர் ராஜேஷ், இந்தப்படத்தையும் அதே ஃப்ரெஞ்ச் மொழியில் 2010ல் வெளியான ‘பாயிண்ட் பிளாங்க்’என்ற படத்திலிருந்து சுட்டிருப்பதாகவும் ஆனால் திரைக்கதையில் பெருங்குழப்பம் இருப்பதால் படம் சலிப்பூட்டுவதாகவும் சொல்கிறார்கள். படத்தில் பாதி சீன்களில் மட்டுமே வரும் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை விக்ரம் ரசிகர்களே கிண்டலடிக்கிறார்கள்.