கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக 'அதோ அந்த பறவை போல' உருவாகியுள்ளது. 

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.


இந்தப் படத்தில் இளம் தொழிலதிபராக அமலாபால் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ளார். அமலாபாலுக்கு நெருக்கமானவராக பாலிவுட் நடிகர் சமீர் கோச்சார் நடித்திருக்கிறார்.


'அதோ அந்த பறவை போல' படத்திற்காக அமலாபால், உயர்ந்த மரங்களில் ஏறுவது மற்றும் பல்வேறு சாகச சண்டை காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளாராம். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த இந்தப் படம், தற்போது ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. அதோ அந்த பறவை போல படத்தை லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வெளியிட்டார். 


கடைசியாக, அமலாபால் நடித்த ஆடை படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அந்தப் படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்திருந்ததுதான். இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சந்தித்தது. அதேபோல் 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசரும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.