‘இது கெட்டப்பு இல்லடா மொட்டப்பு’ என்று அம்மணமாய் ஒதுங்கி அமர்ந்தபடி வடிவேலு வசனம் பேசுவாரே அதே படத்தை வைத்துக்கொண்டு, அமலா பாலின் ஆடை பட நிர்வாணக்காட்சிகளை ஒப்பிட்டு வடிவேலு வெர்சன் உண்டாக்கி வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார் ஒரு புண்ணியவான்.

எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு சிவாஜியின்’வசந்த மாளிகை’ ரீ ரிலீஸ் ஆனாலும் சரி விஜயின் ‘பிகில்’ஃபர்ஸ்ட் லுக் வந்தாலும் சரி, அதற்கு சுடச்சுட ஒரு வடிவேலு வெர்சனை யாராவது ரெடி செய்து வலைதளங்களில் வைரலாக்கிவிடுவார்கள். ஆனால் அதற்காக அரும்பாடு பட்டு, நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த ‘ஆடை’படத்தில் நிர்வாணமாக நடித்த அமலா பாலை வடிவேலுவின் நிர்வாணத்தோடு கோர்த்துவிட்டா வேடிக்கை பார்ப்பது. அந்த அபலைப் பெண்ணின் மனம் என்ன பாடு படும்?

இதன் உச்சக்கட்ட கொடூரம் அந்த வடிவேலு வெர்சன் வீடியோவை சாட்சாத் ‘ஆடை’பட இயக்குநர் ரத்னக் குமாரே ஷேர் செய்து பப்ளிசிட்டி தேடியிருப்பது. அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், “இப்போதெல்லாம் ஒவ்வொரு திரைப்படைப்புக்கும் வடிவேலு வெர்ஷன் வந்துவிடுகிறது. ’ஆடை’ படமும் விதிவிலக்கல்ல. இந்த வீடியோ மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவை பகிர்வதிலிருந்து என்னை நானே கட்டுப்படுத்த முடியவில்லை. ஆடை படம் சுதந்திரத்தைப் பற்றி பேச உள்ளது. நான் பேச்சுரிமையை மதிக்கிறேன். மன்னிக்கவும் அமலாபால்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அதை கொஞ்சமும் ரசிக்காத அமலா பால், வடிவேலுவின் மொட்டப்புடன் தனது கெட்டப்பை ஷேர் செய்திருக்கும் இயக்குநரை நோக்கி ’ஷட் அப்’ என்று கத்தி போனைத் துண்டித்து விட்டாராம்.