படத்தில் நடித்து முடித்தோமா முழு செட்டில்மெண்டையும் வாங்கினோமா என்று நடிகைகள் பட ரிலீஸ் சமயத்தில் முழுமையாக நழுவி விடும் நிலையில் ‘ஆடை’பட ரிலீஸுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்து தயாரிப்பாளர்கள் மத்தியில் சபாஷ் பெற்றிருக்கிறார் நடிகை அமலாபால்.

அமலாபால் நடித்துள்ள ‘ஆடை’ படம் திரைக்கு வந்தபோது பண பிரச்சினையால் சிக்கல் ஏற்பட்டது. வெள்ளியன்று துவக்கத்தில் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்து அத்தனை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.பின்னர் அமலாபால் பண உதவி செய்து படத்தை திரைக்கு கொண்டுவர உதவி உள்ளார். 

இதற்காக அவருக்கு தயாரிப்பாளர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்துக் கூறிய  தயாரிப்பாளர் கே.ராஜன் “ஆடை படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதும் அமலாபால் வடபழனியில் உள்ள லேப்புக்கே வந்துவிட்டார். படம் வெளியாகவில்லை என்றதும் கதறி  அழுதார். பலருடையை எதிர்ப்பை சம்பாதித்து கஷ்டப்பட்டு நடித்தேன். சம்பளம் கூட முழுதாக கிடைக்கவில்லை. இப்போது படம் வெளியாகவில்லை என்பது மேலும் வேதனை அளிக்கிறது என்றார்.

பின்னர் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை வழங்கினார். சம்பளத்திலும் ஒரு பகுதியை அவர் வாங்கவில்லை. படம் வெளியானபிறகுதான் அங்கிருந்து போனார்.தமிழ் திரையுலக வரலாற்றில் இப்படி எந்த நடிகையும் தயாரிப்பாளருக்கு உதவி செய்ததது இல்லை.பேச்சுவார்த்தை நடந்தபோது நானும் சிவா, அருண்பாண்டியன் ஆகியோரும் அங்கு இருந்தோம். ஏற்கனவே பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் திரைக்கு வருவதற்கும் ரூ.32 லட்சம் கொடுத்து உதவினார். அதுபோல் அரவிந்தசாமியும் உதவினார். உதவி செய்த அமலாபாலுக்கு நன்றி சொல்வது திரையுலகினரின் கடமை.” இவ்வாறு கே.ராஜன் கூறினார். பட ரிலீஸ் சமயத்தில் நடிகர்களே ஓடி ஒளிந்துகொள்ளும் நிலையில் ஒரு நடிகை லேப் வரை வந்து உதவியிருப்பது பாராட்டுக்குரிய சமாச்சாரம்தான்.