சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை, அம்மா நடிகையாக கலக்கி வரும், மலையாள நடிகை பிரவீனா, பி.ஜே.பி கட்சியில் இணைய உள்ளதாக காட்டு தீ போல் ஒரு தகவல் பரவிய நிலையில், இதற்க்கு உண்மையை கூறி முற்று புள்ளி வைத்துள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, 'பிரியமானவள்' சீரியலின் மூலம் பிரபலமானவர் பிரவீனா.  இதை தொடர்ந்து வெள்ளித்திரை படங்களிலும் பிஸியாக நடிக்க தொடங்கினார். அந்த வகையில், நடிகர் கார்த்தி நடித்த  "தீரன் அதிகாரம் ஒன்று", விக்ரமுடன் "சாமி 2 ",  ஜெயம்ரவியின் "கோமாளி"  ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2 ' சீரியலில் நடிகை ஆல்யா மானசாவின், மாமியாராக நடித்து வருகிறார். இந்நிலையில் பிரவீனா பிஜேபி கட்சியில் இணைந்து, வரும் சட்ட மன்ற தேர்தலில் திருவனந்தபுரம் அல்லது கொல்லம் தொகுதியில்  போட்டியிட உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இந்த வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நடிகை பிரவீனா இது குறித்து கூறுகையில், "என்னை அரசியலில் இழுத்துவிட்ட முகம் தெரியாத அந்த நபருக்கு நன்றி. எனக்கு அரசியல் தெரியாது. அரசியல் கட்சியில் சேர வேண்டும் என்ற சிந்தனையும் எனக்கு இல்லை. அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் அதனை யாரும் நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்".