டோலிவுட்டில் முன்னணி ஓடிடி தளமாக இருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ‘ஆஹா’ ஓடிடி தளம், தற்போது தமிழிலும் அதன் கிளையை திறந்துள்ளது.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஓடிடி தளங்கள் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ளன. லாக்டவுன் சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் முடங்கிக் கிடந்த படங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆறுதல் தரும் விஷயமாக அமைந்தது ஓடிடிதான். லாக்டவுனுக்கு பிறகு தான் அதிக அளவில் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நடைமுறை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழில் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, ஹாட்ஸ்டார், சோனி லிவ், சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு ஓடிடி தளம் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ‘ஆஹா’ ஓடிடி தளம் தற்போது தமிழில் அறிமுகமாகி உள்ளது. தெலுங்கில் முன்னணி ஓடிடி தளமாக இருக்கும் ஆஹா, தற்போது தமிழிலும் அதன் கிளையை திறந்துள்ளது.

இந்த ஓடிடி தளத்தில் முதல் படமாக பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியான ரைட்டர் திரைப்படம் வெளியிடப்பட உள்ளது. அறிமுக இயக்குனர் பிராங்கிளின் இயக்கி இருந்த இப்படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருந்தார். கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஆஹா ஓடிடி தளம் அதன் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றி உள்ளது.

படங்கள் தவிர்த்து, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்ப அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. படிப்படியாக இதற்கான பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் ரைட்டர் படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.