புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடிகர் நடிகைகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 49 பேர் வீரமரணம் அடைந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது இந்தியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீவிவராத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. 

இந்நிலையில், இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்கிற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இந்தி படங்களில் நடிக்க பாகிஸ்தானை சேர்ந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தடை விதித்து அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இதையும் தாண்டி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணியாற்ற விரும்பும் நிறுவனங்களுக்கும் தடை விதித்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

 

பாகிஸ்தானை சேர்ந்த பாடகர்கள் பாடிய பாடல்களை கைவிடுமாறும், அவர்களுடன் சேர்ந்து இனி பணியாற்றக் கூடாது என்றும் மகராஷ்டிரா நவநிர்மன் சேனா இசை நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே தான் நடித்துள்ள டோட்டல் தமால் படம் பாகிஸ்தானில் வெளியிடப்படாது என்று அஜய் தேவ்கன் அறிவித்துள்ளார்.