பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட் திரையுலகின் வாரிசு அரசியலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தமும் தான் காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பாலிவுட் ரசிகர்களின் கோபம் வாரிசு நடிகர்கள், நடிகைகள் மீது திரும்பியது. அதிலும் குறிப்பாக நடிகை ஆலியா பட் மீதும் அவருடைய குடும்பத்தினர் மீதும் ரசிகர்கள் செம்ம கடுப்பில் உள்ளனர். 

 மகேஷ் பட் இயக்கத்தில் அவரது மகள்கள் அலியா பட், பூஜ பட் நடித்திருக்கும் 'சதக் 2'  படத்தின் டிரெய்லர் நேற்று யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது பட டிரெய்லர் லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளி சாதனை படைக்கும் என ஆசையாய் காத்திருந்த ஆலியா பட்டிற்கு சுஷாந்த ரசிகர்கள் செம்ம அதிர்ச்சி கொடுத்தனர். 

யூடியூபில் வெளியான 24 மணிநேரத்தில் அதிகம் டிஸ்லைக் செய்யப்பட்ட வீடியோவாக சதக் 2 ட்ரெய்லர் ஆகியுள்ளது. சதக் 2 ட்ரெய்லரை இதுவரை யூடியூபில் 325,000 பேர் லைக் செய்துள்ளனர். அதே சமயம் 5.9 மில்லியன் பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். இது குறித்து பலரும் ட்விட்டரில் பேசி வருவதால் #Sadak2dislike என்கிற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

 

சுஷாந்தின் மரணத்திற்கு முக்கிய காரணமாக ரசிகர்கள் கருதுவது பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மகேஷ் பட்டை தான், இதனால் தான் அவருடைய மகளான ஆலியா பட் மீது மொத்த கோபமும் திரும்பியுள்ளது. சத்க் 2 படத்தின் டிரெய்லரை டிஸ்லைக் செய்ய வேண்டுமென சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதையடுத்தே அதிக டிஸ்லைக்குகளை பெற்ற திரைப்படம் என்ற சாதனையை சதக் 2 பெற்றது குறிப்பிட்டத்தக்கது.