பொதுவாக பண்டிகை காலங்களில் ஒலிபெருக்கிகளிலும் சரி தொலைக்காட்சிகளிலும் சரி அந்த விழாவை சம்மந்தபடுத்துவது போன்ற பாடல்களும், திரைப்படங்களும் ஒலி/ஒளிபரப்புவது வழக்கம்.

அந்த வகையில் பொங்கல் தினம் என்றால் கமல் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்தில் இடம்பெறும் பொங்கலோ பொங்கல் என்ற பாடலும் விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி திரைப்படத்தில் இடம்பெறும் போக்கிரி பொங்கல் என இந்த பாடல்கள் எல்லா திசைகளிலும் காதில் ஒலிக்கும்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா என்றால் சத்யராஜ் மற்றும் ரகுமான் நடித்து வெளியான உடன்பிறப்பு திரைப்படத்தில் வரும் 'சாமி வருது சாமி வருது வழிய விடுங்கடா என்ற பாடலும், சிவக்குமார் நடித்த சிந்துபைரவி திரைப்படத்தில் இடம்பெறும் மகாகணபதி என்ற பாடல் மட்டுமே இருந்தநிலையில் தொடர்ச்சியாக அஜித் பாடல்கள் அதனை பின்னுக்கு தள்ளியது.

விநாயகர் சதுர்ச்சி என்றாலே அஜித் பாடல்கள் இல்லாத ஆட்டோ ஸ்டாண்டுகளும், தொலைக்காட்சிகளும் இல்லாத ஒரு நிலைக்கு வந்தது. அஜித் திரைப்படம் வெளியாகும் தருணத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபடுவது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதையும் தாண்டி விநாயகருக்கும் அவருக்குமான சென்டிமெண்டுகள் அஜித்தின் திரைப்படங்களில் அதிகம்.

1996ல் வெளிவந்த வான்மதி திரைப்படத்தில் பிள்ளையார்பட்டி ஹீரோ நிதான்பா கணேசா என்ற தேவா குரலில் ஒலிக்கும் அந்த பாடல் இன்றளவும் பட்டி தொட்டியெல்லாம் வெகுஜன மக்களிடமும் முணுமுணுக்க வைக்கிறது. பின் 1999ல் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் மகாகணபதி பாடலும் ஹிட்டானது. பின் அஜித்தின் முகமும் ஏறுமுகமானது. மங்காத்தா திரைப்படத்தில் கூட அஜித்தின் பெயர் விநாயக் என்பது ரசிகர்களிடையே அஜித் விநாயகர் சென்டிமெண்ட்டான மனிதன் என்ற அரசல்புரசலான விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

பின் அதனை உறுதி செய்யும் விதமாக சில வருடத்திற்கு முன் வெளியான வேதாளம் திரைப்படத்தில் வீர விநாயகா வெற்றி விநாயகா பாடல் மூலம் விநாயகர் மீது சென்டிமெண்ட் அஜித்திற்கு இருக்கிறது என்பதை அவரது திரைப்படங்களில் சொல்லாமல் சொல்லி இருந்தார்கள்.