தனது ரசிகர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் நடுவே முற்றிவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ரஜினியை நேரில் சந்தித்து தனது ‘விஸ்வாசம்’ படம் பார்க்க வருமாறு அஜீத் அழைப்பு விடுக்கவிருப்பதாக ஒரு செய்தி தடதடக்கிறது.

சென்னை துவங்கி தமிழகத்தின் அத்தனை ஊர்களிலும் ஒரே தேதியில் தங்கள் தலைவரின் படங்கள் ரிலீஸாவதை ஒட்டி, போஸ்டர் ஒட்டுவது பேனர் வைப்பது போன்ற சமாச்சாரங்களில் பெருத்த போட்டி நிலவி வருகிறது. இதனால் சில இடங்களில் சிறுசிறு மோதல்களும் அரங்கேறி வருகின்றன. ‘நீ ரஜினிக்கு 16 பிட்ஸ் போஸ்டர் அடிப்பியா நாங்க தல’க்கு 32 பிட்ஸ்ல அடிப்போம்’ என்று போகிறது அவர்களது மோதல். சில இடங்களில் பரஸ்பரம் போஸ்டர்களைக் கிழிக்கவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் 90 சதவிகித காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் அடுத்தடுத்த ஸ்கிரீன்களில் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள் ரிலீஸாகின்றன. அஜீத்தும் ரஜினியும் தங்களைப் போட்டியாளர்களாக நினைக்கிறார்களோ ரசிகர்கள் பல இடங்களில் வெறிகொண்டு வேலைசெய்து வருகின்றனர். ரிலீஸன்று பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்ய இரு தரப்புமே நூற்றுக்கணக்கான லிட்டர்களில் பாலை முன் பதிவு செய்துவைத்துள்ளனர்.

இச்செய்தியைக் கேட்டு ரஜினி மவுனமாக இருக்க, சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க விரும்பும் அஜீத், அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அது ரஜினியை உடனே சந்தித்து தனது ‘விஸ்வாசம்’ படத்தைப் பார்க்கவைப்பது. அப்படி நடந்தால் ரசிகளிடம் கொஞ்சம் வெறி தணியும் என்பது அவரது கணக்கு. ஆனால் இந்த சமாதானக் கொடியை ரஜினி ஏற்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.