வெங்கட் பிரபுவுடன் ‘மங்காத்தா’ பார்ட் 2 படத்தில் அடுத்து அஜீத் நடிக்கப்போகிறார் என்ற செய்தியை அவசர அவசரமாக அவர் தரப்பு மறுத்ததன் பின்னணி வெளியாகியுள்ளது. இன்றைய தேதியில் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குநர் என்ற அந்தஸ்தில் இருக்கும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் படத்தில் அடுத்து அஜீத் நடிக்கவிருப்பதாக படு ஹாட்டான செய்தி ஒன்று நடமாடுகிறது.

போனிகபூர் தயாரிப்பில்,இயக்குனர் வினோத் இயக்கும் ‘தல 59’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, அவருடைய ஃபேவரைட் ஸ்டுடியோவான ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோவான அங்கு ஒரே நேரத்தில் பல படங்களின் படப்பிடிப்பு நடப்பது வழக்கம்.

அஜீத் படப்பிடிப்புக்கு போன இரண்டாவது நாளே  இயக்குனர் பிரிதர்சன் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் ‘அரபிக்கடலிண்ட சிம்ஹம்’ படப்பிடிப்பு நடக்கும் தகவல் கிடைத்திருக்கிறது. அழைப்பு இல்லாமலேயே அவர்களைத் தேடிப்போய் பார்த்திருக்கிறார். அவர்களின் உரையாடலுக்கு நடுவே பக்கத்து செட்டில்தான் பிரபாஸ் படமும் நடக்கிறது என்று லாலேட்டன் சொல்ல 'தல' அந்த செட்டிற்கும் போய் பிரபாஸைப் பார்த்திருக்கிறார்.

இங்கேதான் அந்த முக்கியமான ட்விஸ்ட் இருக்கிறது. பிரபாஸிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாடிய அஜீத் ‘சீக்கிரமே நாம ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கணும்’ என்ற தனது விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பிரபாஸும் ‘நாம மூனு பேரும் சேர்ந்து அந்தப் படத்துல மொத்த இந்தியாவையும் கலக்குறோம்’ என்று பதில் சொல்லி டாட்டா காட்டியிருக்கிறார். நாம மூனு பேரும் என்று மூன்றாவதாகச் சொன்னது பிரபாஸின் ஃபேவரிட் டைரக்டரான எஸ்.எஸ்.ராஜமவுலியை.

18 ஆண்டுகளில் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ள எஸ்.எஸ். ராஜமவுலி இதுவரை ஒரு தோல்விப்படம் கூடக் கொடுக்காத ஈடு இணையற்ற சாதனைக்குச் சொந்தக்காரர். அவர் தற்போது இயக்கிவரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தையும் சேர்த்து  நான்கு படங்களில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.