நடிகர் அஜீத்தின் மனைவி ஷாலினி தனது 40 வயதில் காலடி எடுத்து வைத்திருப்பதைத் தொடர்ந்து அவருக்குக் குவியும் வாழ்த்துப்பதிவுகள் ட்விட்டரில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. திரையுலக பிரபலங்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

‘83ம் ஆண்டு தனது மூன்றாவது வயதில் ஃபாசிலின் ‘எண்டெ மம்மாட்டிக்குட்டியம்மைக்கு’என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஷாலினி தமிழிலும் மலையாளத்திலும் குழந்தை நட்சத்திரமாக மட்டுமே சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் ‘97ம் ஆண்டு அதே ஃபாசிலின் இயக்கத்தில் ‘அனியத்துப் புறாவு’மலையாளப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் நாயகியானார். பின்னர் அதே படம் காதலுக்கு மரியாதையாகி தமிழின் நம்பர் ஒன் நடிகையானார். அடுத்து அஜீத்துடன் ‘அமர்க்களம்’ விகய்யுடன் ‘கண்ணுக்குள் நிலவு’ மணிரத்தின் ‘அலைபாயுதே’உள்ளிட்ட சுமார் 11 படங்களில் மட்டுமே நடித்த அவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது அஜீதுடன் காதல் வயப்பட்டு 2000ம் வருடத்தில் ஏப்ரல் 20ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

அத்தோடு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட ஷாலினி திருமணத்துக்குப் பின்னர் நடித்த ஒரே படம் பிரசாந்தின் பிரியாத வரம் வேண்டும். ஃபைனான்ஸ் பிரச்சினையால் பாதியில் நின்று போயிருந்த அப்படத்தை தனது திருமணம் முடிந்த அடுத்த வருடம் ஷாலினி முடித்துக்கொடுத்தார். அஜீத் ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். 

ஷாலினி திருமணம் செய்த ஆண்டிலிருந்து இன்று வரை அஜீத்தின் சினிமா முடிவுகள் எதிலும் தலையிடுவதோ,கருத்துச் சொல்வதோ இல்லை. அவரது படப்பிடிப்புக்கும் மிக அரிதாகவே தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வருவார். தான் படங்களில் நடித்த காலங்களில் ஒரு கிசுகிசுவில் கூட சிக்காத நடிகை என்றால் உலக அளவில் அது ஷாலினியாகத்தான் இருக்கும். நேற்று நள்ளிரவு முதலே அஜீத் ரசிகர்கள் ஷாலினியின் பிறந்தநாளை அவரது இளம் வயதுப் புகைப்படங்கள் தொடங்கி அமர்க்களப்படுத்தி வருவதால் ட்விட்டரில் முதல் மூன்று இடங்களிலும் அவர்தான் வியாபித்திருக்கிறார்.