’நாராயணா இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலடா’ என்பது மாதிரிதான் சில நேரங்களில் ரசிகர்களின் அன்புத்தொல்லையும். அஜீத்தின் அடுத்த படமான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்களும், செய்திகள் குறித்த அப்டேட்களும் ஜூலை முதல் வாரம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும் புதுப்புது ரீல்களை அள்ளி ஓட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த வரிசையில் ’மலேசிய தல அஜீத் ஃபேன் கிளப்’ ஒன்று சற்றுமுன்னர் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பக்காவாக வெளியிட்டு அதில் அஜீத் உட்பட சில முக்கிய கேரக்டர்களுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் விபரங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். படத்தில் அஜீத் வக்கீலாக நடிப்பதால் அவர் கேரக்டரின் பெயர் நீதி தேவனாம். அவர் மனைவியாக நடிக்கும் வித்யா பாலனின் பெயர் மீராவாம்.

அப்பதிவுக்குக் கீழே கமெண்ட் போட ஆரம்பித்திருக்கும் அஜீத் ரசிகர்கள்,..’என்ன பாஸ் விக்கிபீடியாவுல அஜீத் கேரக்டரோட பேரு பெருமாள் வீர ராகவன்னு போட்டுருக்கு. நீங்களும் நம்புற மாதிரி தெளிவா குழப்புறீங்களே? என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.