* சவுந்தர்யாவின் திருமணத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் புதிய படத்துக்கான பணிகளில் உடனே இறங்குகிறார் ரஜினி: செய்தி. (சரி தலைவா, தல-யும் பிங்க் பட ரீமேக்கில் ரெடியா ஸ்டெடியா போயிட்டிருக்கார். அடுத்த மோதலுக்கு தயார்ன்னு சேதி சொல்லிடலமா போனி கபூர் கம்பெனி சைடுல?)

* ஐந்து ரூபாய் உறுப்பினர் சீட்டு தொண்டனாக காங்கிரஸில் இனி இருப்பேன். இயக்க வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: திருநாவுக்கரசர். 
(இல்லே...இங்கே அரசு, அரசுன்னு ஒரு மானஸ்தர் இருந்தாரு. ‘நாடாளுமன்ற தேர்தல் முடியுற வரைக்கும் நான் தாண்டா மாநில தலைவர்’ன்னு சவுண்டு விட்டாரு. அவரை எங்கேன்னுதான் தேடிட்டு இருக்கோம், யாராச்சும் பார்த்தீங்களா பாஸு)

* நான் தி.மு.க.வில் என்ன பொறுப்பில் இருக்கிறேன் அப்படின்னு கேட்கிறாங்க அ.தி.மு.க.காரங்க. ஏன் கட்சிப் பொறுப்புல இல்லாம மக்களை சந்திக்ககூடாதா? சேவை செய்ய கூடாதா?: உதயநிதி ஸ்டாலின். (அதானே தல, ஒரு விஷயத்துல இல்லாம அதுக்குள்ளேயே சுத்திட்டு இருக்குறது உங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்லையே. சில வருஷமா நடிகனா இருக்கீங்க, தொடந்து உங்கள் படங்கள் வருது. ஆனா உங்களுக்கு நடிக்க வருதா?!...அது மாதிரிதானே இதுவும்! இதெல்லாம் ஒரு கேள்வின்னு கேக்குறாய்ங்க பாருங்க ஆளுங்கட்சிக்காரங்க.)

* இயக்குநர் ரஞ்சித்தின் பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதுதான். அவருடன் சேர்ந்து செயல்பட நாங்களும் தயாராக இருக்கிறோம். அதேபோல அவரும் எங்களுடன் சேர்ந்து செயல்படலாம்: திருமாவளவன். (ஆமா தலீவரே, அவரு மறுபடியும் ரஜினிய வெச்சு ஒரு படம் பண்ணப்போறாராம். அதுல நீங்களும் ஒரு வெயிட்டு ரோல் வாங்கிடு, ஷூட்டிங் ஸ்பாட்டுல பேசிப்பேசியே ரஜினிய கரைச்சு வி.சி.க.வுக்கு இட்டாந்துடுங்க. அப்பாலிக்கா நெக்ஸ்ட்டு எலெக்‌ஷனுக்கு இஸ்டாலின் நம்ம கட்சி கூட கூட்டணி வைக்க தலி கீழா நின்னு தண்ணியக்குடிக்கணும்! சோக்கா கீதா நம்ம பிளானு?)

* எங்கள் கட்சியின் இரண்டாமாண்டு துவக்க விழாவில் கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய சர்ப்பரைஸ் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது. அதுவரையில் அதெல்லாம் சஸ்பென்ஸ், ரகசியம்!: ம.நீ.ம. செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ். (தோழர் நீங்க ‘ரகசியம், பரம ரகசியம்’ அப்படின்னு சொல்றத பார்த்தா பன்னீர்செல்வம் ஸ்டைலால்ல இருக்குது. ஒரு வேள அ.தி.மு.க. கூட கூட்டணியா, இல்ல பன்னீரை தனியா பிரிச்சுட்டு வந்து தர்மயுத்தம் சீசன் -2 கூட்டணியா?)