‘ரசிகர் மன்றத்தைக் கலைத்துவிட்டாரே ஒழிய, படப்பிடிப்பு இடைவேளைகளில் எப்போதும் தன் ரசிகர்கள் குறித்து மிகவும் அக்கறையுடன் விசாரித்தபடியேதான் இருப்பார் தல அஜீத்’ என்கிறார் ‘விஸ்வாசம் படத்தில் அவருடைய பங்காளியாக நடித்த ரோபோ சங்கர்.

’விஸ்வாசம்’ படத்தில் அஜீத்துடன் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்த ரோபோ சங்கர், ‘’நான் விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக தலயை பார்த்ததே இல்லை. நான் அவரை முதல் முதலில் பார்த்ததே வேட்டி கட்டு பாடலின் படப்பிடிப்பின் போது தான். ஷூட்டிங்கின் முதல் நாள்  கேரவ ன் அருகில் தான் நான் இருந்தேன். அஜித்தின் கேரவனுக்கு சென்றதும் என்ன பேசுவது, கை கொடுப்பதா வேண்டாமா என ஒரே பதட்டமாக இருந்தது. ஆனால் அந்த பதட்டத்தை எல்லாம் ஒரு நொடியில் அஜித் உடைத்து விட்டார். என்னை பார்த்ததும் ரோபோ ஷங்கர் எப்படி இருக்கீங்க சார். குடும்பத்தில் அனைவரும் எப்படி இருக்காங்க என கேட்டுவிட்டு, உங்க கிட்ட ஒர்க் பண்றது மிகவும் சந்தோசம். வாங்க போகலாம் சாங் ஷூட்டிங்கிற்கு என என்னையும் அழைத்து சென்றார். 

அதே போல படப்பிடிப்பின் இடைவேளைகளில்  அவர் தூங்கவே மாட்டார். அவர் அனைவரிடமும் கலகலவென பேசிக்கொண்டே தான் இருந்தார்.  கமலுக்கு பின் நான் கடவுளாக நினைப்பது அவரைத் தான். என்னுடைய ஆயுளைக் கூட அவருக்கு கொடுத்து விட வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. மேலும்,  மன்றத்தைத்தான் கலைத்துவிட்டாரே ஒழிய அவர் ரசிகர்கள் செய்யும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார். நான் நடிக்கிறேன் ஆடுகிறேன் என்றால் அது ரசிகர்களால் தான். கண்டிப்பாக அவர்களுக்காக நான் கண்டிப்பா ஏதாவது பண்ணனும் என்று அஜித் சார் கூறிக்கொண்டேயிருப்பார் என்கிறார் ரோபோ ஷங்கர் மிக நெகிழ்ச்சியாக. 

ரோபோ சங்கர் சொன்ன தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் தன்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தவைத்த காரணத்திற்காகவும், பட ரிலீஸின் போது நடந்த சில வன்முறைகளைக் கணக்கில் கொண்டும் அஜீத் மீண்டும் ரசிகர் மன்றத்தை அறிவித்து, அதை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள திட்டமிட்டு வருவதாக சில தகவல்கள் வருகின்றன.