‘தல’பெருசா ‘தளபதி’பெருசா என்ற மோதல்கள் ஓரளவு ஓய்ந்து முடிந்து இரு தரப்பும் மவுனம் காத்திருக்கும் நிலையில் அடுத்த ஒரு வலுவான சண்டைக்கு வழி வகுத்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றியிருக்கிறது ட்விட்டர் இணையதளம். அதாவது 2019ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் ’விஸ்வாசம்’தான் என ட்விட்டர் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் பல்வேறு விஷயங்கள் ட்ரெண்டாக்கப்படுகின்றன. குறிப்பாக ட்விட்டரின் முக்கிய அம்சம் ட்ரெண்டிங் எனக் கூறலாம். யாரேனும் ஒரு பிரபலத்திற்கு பிறந்த நாள், ஏதேனும் ஒரு முக்கிய நாள், புதிய திரைப்படம் என நாள்தோறும் ஏதேனும் ஒன்று ட்ரெண்டாகிக் கொண்டே இருக்கும்.இப்படி ட்ரெண்டாகும் விஷயங்களில் அடிக்கடி பார்க்கக் கூடிய ஒரு ட்ரெண்டிங்காக அஜித் இருப்பார். அவரது படம் அல்லது பாடல் என ஏதேனும் ஒன்றை அவரது ரசிகர்கள் ட்விட்டரின் ட்ரெண்டாக்கி வைத்திருப்பார்கள். மற்ற நடிகர்கள் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் அன்று கூட அஜித் தொடர்பான ட்ரெண்டிங் ஏதாவது  இருக்கும். அந்த அளவிற்கு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ஆதிக்கம் இருக்கிறது.

அதை நிரூபிக்கும் வகையில் ட்விட்டர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய தினம் ஹேக்டேக் தினம் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2019ஆம் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகள் வெளியிடப்பட்டுள்ளது.இதில் அஜித் நடித்த திரைப்படமான விஸ்வாசம் (#Viswasam ) முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தில் 2019ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் (#LokSabhaElections2019 ) இருக்கிறது. மூன்றாம் இடத்தை கிரிக்கெட் உலகக் கோப்பையும் (#CWC19 ), நான்காம் இடத்தை மஹரிசி படமும் (#Maharshi ) பிடித்துள்ளது.  5ஆம் இடத்தில் புதிய முகப்பு புகைப்படம் (#NewProfilePic ) உள்ளது.

இத்தகவலை தற்போது அஜீத் ரசிகர்கள் தல மேல் வைத்துக்கொண்டாடத் துவங்க விஜய் ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.