அஜித் பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் மோசடி வழங்கி கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் செக் மற்றும் பண மோசடி காரணமாக நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், திரையரங்க உரிமையாளருமான சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் காரணமாகவே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 85 லட்சம் வாங்கி கொண்டு, அதை தராமல் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாய், செக் கொடுத்து மோசடியிலும் ஈடுபட்டுள்ளார் சிவசக்தி பாண்டியன்.
இதுதொடர்பான வழக்கு, சென்னை சைதாப்பேட்டையில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி அவர் மீது கைது நடவடிக்கை எடுக்க சொல்லி நுங்கம்பாக்கம் காவல்துறைக்கு வாரண்ட் பிறப்பித்தார். இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை சில மணி நேரங்களுக்கு முன் கைது செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிவசக்தி பாண்டியனை, புழல் சிறையில் அடைத்துள்ளனர். தமிழில் பல படங்களை சிவசக்தி பாண்டியன் தயாரித்திருந்தாலும், அஜித்தின் காதல் கோட்டை படத்தை தயாரித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.