ஒரு பெண்ணை ஒரு ஆண் உடல் ரீதியாக அடைய நெருங்கும்போது அவள் ‘நோ’என்று சொன்னால் அது நோ’தான். அவள் தோழியாக, காதலியாக,மனைவியாக அவ்வளவு ஏன் பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவள் ‘நோ’என்று சொன்னால் நோ’தான். இந்த ஒரு செய்திதான் ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் அடிநாதமான கதையே.

இது இந்தி பிங்க்’படத்தின் ரீமேக் என்று லட்சத்துச் சொச்ச தடவை சலிக்கச் சலிக்க சொல்லிவிட்டோம் என்பதால் அதை இப்படி விமர்சனம் எழுதுகிற கொஞ்ச நேரமாவது ஒரு ஓரமாய் வைத்து விடுவது நல்லது. ஏனெனில் ரீமேக்கப்படுகிற பல படங்களில் அதன் ஒரிஜினல் ஜீவன் எங்கே இருக்கிறது என்று தேட வைத்துவிடுவார்கள். ஆனால் இம்முறை இயக்குநர் ஹெச்.வினோத் மாயம் செய்திருக்கிறார்.

மீரா, அபிராமி, ஆண்ட்ரியா மூவரும் ஒரே வீட்டில் வசிக்கும் மாடர்ன் கேர்ள்ஸ். ஒரு நாள் பார்டிக்குப் போகும்போது திடீர் நண்பர் ஒருவர் குடிபோதையில் மீராவிடம் அத்துமீற ஆரம்பிக்க பாட்டிலால் மண்டையைப் பொளந்துவிடுகிறார். அடிவாங்கிய நபர் பெரிய இடம் என்பதால் மூவருக்கும் மிரட்டல்கள் வருகின்றன. மீரா மறுபடியும் காரில் கடத்தப்பட்டு பாலியல் கொடுமை செய்யப்படுகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளவேண்டிய போலீஸ் மீராவைத் தூக்கி உள்ளே போட, பரத் சுப்ரமணியம் ஆகிய அஜீத் அவர்கள் வழக்கில் ஆஜராகிறார். இடைவேளைக்குக் கொஞ்சம் முன்னால் துவங்கும் கோர்ட் அறைக் காட்சிகள் அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீள, ஒரு பரபர க்ளைமேசுடன் படம் முடிகிறது.

இந்திய சினிமாவில் குறிப்பிட்ட அளவு புகழ் பெற்ற பின்னர் மசாலா சினிமாக்களை விட்டு கொஞ்சம் நகர்ந்து நல்ல சினிமாக்களில் நடிக்கத்துவங்கும்போதுதான் நடிகர் என்பதைத் தாண்டி ஒரு சமூக அந்தஸ்து கிடைக்கும். அதில் அமிதாப் முன்னோடி. தன்னிகரில்லா எடுத்துக்காட்டு ஆமிர் கான். நம் கமலும் அவ்வகையான விஷப்பரிட்சைகள் ஏராளம் செய்தவர்தான். இதுகுறித்து எதுவும் அறியாப்பிள்ளையான அஜீத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’யின் மூலம் சின்னதாய் ஒரு மெழுகுவர்த்தையை இயக்குநர் வினோத் ஏற்றிவைத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

ரசிகர்களுக்காக ஒரே ஒரு சண்டைக் காட்சி மட்டுமே உள்ள இப்படத்தில் அஜித்தின் அறிமுகக் காட்சி தொடங்கி கோர்ட்டில் அடித்தொண்டையில் பேசுவது கோபம் வரும்போது உச்சஸ்தாயியில் அட்சித்தூக்குவது என்றும் என்று சத்தியம் முற்றிலும் ஒரு வித்தியாசமான தல தரிசனம். நடிக்கச் சொன்னால் நடக்கிறார் என்பவர்கள் இப்படத்தைப் பார்த்தால் படம் முடிந்தவுடன் தியேட்டர் வாசலில் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்புக் கோருவார்கள். 

நடுவில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்காய் வந்துபோகும் அஜீத்,வித்யா பாலன் தாம்பத்தியக் காட்சிகள் தேவையா இல்லையா என்று பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். வித்யா பாலனின் பேரழகுக்காகவே ’அய்யா அந்தக் காட்சிகள் படத்துக்குத் தேவைதான்யா’என்றே தீர்ப்புக் கூறுவார்.

மாடர்ன் நங்கைகள் மூவரில் அதிக ஸ்கோர் பண்ண வாய்ப்புள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத் அபாரமான தேர்வு. மற்ற இருவரும் கூட சோடைபோகவில்லை. நீதிபதியாகவே வாழ்ந்திருக்கும் ராமச்சந்திரன் குறித்து சொல்லாவிட்டால் அடுத்த வேளை சோரு கிடைக்காது.ஒரிஜினல் நீதிபதி பதவியே இவருக்குக் கொடுக்கலாம் என்கிற அளவுக்கு வாழ்ந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா தன் உச்சப்பட்ச துல்லியத்துடன் ஒளிர்கிறார். யுவனும் டிட்டோ.

படத்தில் குறைகளே இல்லையா? இன்றைய தேதியில் படத்தின் நீளம் 158 நிமிடங்கள் என்பதே ஒரு குறைதான்.கோர்ட் காட்சிகள் சில க்ளிஷேவாக இருக்கின்றன. குறிப்பாக அஜீத் தரப்பு பெண்கள் மீது பாண்டே அபாண்டேவாக குற்றம் சுமத்துகிறபோது அவர் ஒவ்வொரு முறையும் எழுந்து ‘நோ கிராஸ்’என்று சொல்வது. ஒரே சண்டைக் காட்சி என்றாலும் அதில் துளியும் லாஜிக் இல்லாமல் அஜித் ரவுடிகளை ஒற்றை ஆளாய் வெளுத்துக் கட்டுவது. ஆனால் மிக சென்சிடிவான ஒரு விவகாரத்தை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்ற வகையில் தனது மூன்றாவது படத்தின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி ஹேட்ரிக் அடித்திருக்கிறார் ஹெச்.வினோத்.