பொங்கல் திருவிழாவை ஒட்டி, ரஜினிகாந்தின் ‘பேட்ட’  படத்தோடு களமிறங்கிய விஸ்வாசம் உலகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.  தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டரில் அதிக டிக்கட் விற்று முந்தைய பட சாதனைகளை முறியடித்துள்ளது. தொடர்ந்து 5வது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

கடந்த வாரம் ரிலீஸ் ஆன வந்தா ராஜாவாகத்தான் வருவேன், சர்வம் தாள மயம், பேரன்பு மற்றும் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான சார்லி சாப்ளின் 2 போன்ற படங்கள் போட்டிகளுக்கு மத்தியிலும், நல்ல வசூலை அள்ளுகிறது. இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான கடந்த 2017 அம் ஆண்டு ரிலீஸ் ஆன மெர்சல்’ படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்து, ஒட்டுமொத்த வசூலில் தமிழ்நாட்டில் 3வது இடத்தை ‘விஸ்வாசம்’ பிடித்துள்ளது. 

அதுமட்டுமல்ல, பிரபாஸ் நடிப்பில்  2017 ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி 2’ மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ ஆகிய படங்களின் வசூலை ஓரிரு நாளில் முறியடித்துவிடும் என சொல்கிறார்கள். அதேபோல சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ‘விஸ்வாசம்’ படம் ரூ.180 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. விரைவில் ரூ.200 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக பாக்ஸ் ஆபிஸில், ‘விஸ்வாசம்’ ரூ.133.53 கோடியை வசூல் செய்துள்ளது. சென்னையை பொறுத்த வரை ரூ.12.98 கோடியை ஈட்டியுள்ளது. ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படம், சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடியைத் தாண்டி முதலிடத்தில் உள்ளது.

ஆனாலும் தமிழக அளவில் ‘விஸ்வாசம்’  படம் தான் மரண ஹிட் அடித்துள்ளது. ரஜினியின் பேட்ட படத்துடன் பாக்ஸ் ஆபிஸ் மோதலில் ஈடுபடாமல் வெளியாகியிருந்தால், ’பாகுபலி 2’ பட மொத்த சாதனையை  இரண்டே வாரத்தில் விஸ்வாசம் மிஞ்சியிருக்கும் என்று சொல்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.