சென்னை பள்ளிக்கரணை, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு, பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில்  மதுரையில் உள்ள தல அஜித்தின் ரசிகர்கள் இனி, மனித கடவுள் அஜித்துக்கு பேனர் வைக்க மாட்டோம் என, போஸ்டர் அடித்து ஒட்டி உறுதிமொழி எடுத்துள்ளனர்.

பொதுவாகவே, அஜித் மிகவும் மென்மையான மனிதர், அனைவருக்கும் உதவும் மனம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் மூலம் தன்னை பிரபல படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கும் சில நடிகர்கள் மத்தியில், ரசிகர்கள் மன்றமே வேண்டாம் என, அதிரடியாக தூக்கியவர். அதே போல் பல முறை, பேனர்கள், கட்டவுட்டுகள் வைக்க வேண்டாம் என ரசிகர்களை வலியுறுத்தியுள்ளவர்.

ஆனால் அஜித் மீது அதீத பாசம் கொண்ட ரசிகர்கள், நற்பணி மன்றம் என்கிற பெயரில், பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர். அதே போல் அஜித்தின் படங்கள் வெளியானால், பிரமாண்ட கட்டவுட்டுகள் வைத்து, வெடி, ஆட்டம் பாட்டம், என அன்றைய தினத்தை தீபாவளி போல் கொண்டாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் கட்டவுட் விழுந்து, சுபஸ்ரீ என்கிற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து மதுரை அஜித் ரசிகர்கள் போஸ்டரில் ஒன்றரை ஊர் முழுக்க ஒட்டியுள்ளனர். இதில் அவர்கள் கூறியுள்ளதாவது "சாலைகளின் பேனர் கவிந்து சுபஸ்ரீ என்கிற சகோதரியின் இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னாள் நாம் சிந்தித்து செயல் பட தவறுவதால் ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது. இனிமேலாவது சிந்தித்து செயல் படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரதிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

அதே போல் தல அஜித்தின் படங்களுக்கு அவர் புகழை பரப்பும் விதமாக  எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களிலும் பேனர் வைக்க மாட்டோம் என உறுதி மொழி எடுப்பதாகவும், இப்படிக்கு மனிதகடவுள் அஜித் பக்தர்கள் மதுரை. என இந்த போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.

அஜித் ரசிகர்கள் செய்துள்ள இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்களிடம் வரவேற்பு கிடைத்திருந்தாலும், இதே போல் அனைத்து அஜித் ரசிகர்களும், மற்ற நடிகர்களின் ரசிகர்களும் நினைத்து சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.