பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று, தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம் திரைப்படம் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. 

இந்த படத்தை வரவேற்க அஜித் ரசிகர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே தயாராகி வருகிறார்கள். குறிப்பாக பார்ப்பவர்களே பிரமிக்கும் வகையில், 4000 சதுர அடியில் பேனர், நடுக்கடலில் பேனர், மிக உயரமான கட்டவுட், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அஜித் புகைப்படங்கள் என கெத்து காட்டி வருகிறார்கள்.

அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் இந்த படத்தில் நடித்துள்ளதால்,  நயன்தாரா ரசிகர்களிடமும் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு எழுந்துள்ளது.

முதல் காட்சியை ஆரவாரத்தோடு வரவேற்ற அஜித் ரசிகர்கள் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து, வெடி வெடித்து மேலதாளம் என ஒரு வழி செய்துவிட்டனர்.

இந்நிலையில் தேனியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஓவராக தான் கொண்டாடி விட்டார்களோ என நினைக்க வைத்துள்ளது அங்கு அரங்கேறியுள்ள சம்பவம். தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள,  பிரபல திரையரங்கில் அஜித் 'விஸ்வாசம்' படத்தை கொண்டாடுகிறோம் என்கிற பெயரில், திரையரங்கத்தில் உள்ள ஸ்கிரீனை கிழித்து விட்டனர்.

இதனால் திரையரங்க உரிமையாளருக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் ரசிகர்களின் இந்த செயல் குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியாக, பலர் கொண்டாட்டம் என்ற பெயரில் அஜித் ரசிகர்கள் இப்படி மோசமான நடந்து கொள்வதா? என விமர்சித்து வருகின்றனர்