தல, தளபதி போட்டியில் ரசிக மகா ஜனங்களுக்கு இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் தரக் காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்காக இதுவரை தமிழ் சினிமா காணாத புதிய முயற்சி ஒன்றில் இறங்கியிருக்கிறார்கள் யாருக்கும் தலைவணங்கா தல ரசிகர்கள்.

துவக்கத்தில் பேனர், ஃப்ளக்ஸ்களில் விதவிதமான வாசகங்கள் எழுதுவதில் போட்டிபோட்டு வந்த அஜீத்,விஜய் ரசிகர்கள் சர்கார், விஸ்வாசம் பட சமயத்தில் யார் உயரமான கட் அவுட் வைப்பது என்று மோதிக்கொண்டார்கள்.

இந்நிலையில் அஜீத் படம் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10 என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே சென்னையில் பல தியேட்டர்களில் முதல் இரண்டு நாட்களுக்கு ரகசிய புக்கிங் முடிந்துவிட்டது என்றொரு வதந்தி நடமாடி வருகிறது. இதற்கிடையில் ‘நே.கொ.பா’வில் அஜீத் வக்கீலாக நடித்திருப்பதால் ஒன்லி வக்கீல்கள் மட்டும் பார்க்கும் சிறப்புக் காட்சி ஒன்றுக்கு திருவள்ளூர் மாவட்ட அஜீத் ரசிகர்கள் அறிவித்துள்ளனர். எந்த தியேட்டர்களில் எத்தனை காட்சிகள் என்பதைப்பின்னர் அறிவிப்பார்களாம்.யார் கண்டது ஒருவேளை இதே யோசனை தமிழகம் முழுவதும் கூட அரங்கேற்றப்படலாம்.

அப்படி நடந்தா நேர்கொண்ட பார்வை ரிலீஸாகுற அன்னைக்கு தமிழ் நாட்டுல அத்தனை கோர்ட்டுக்கும் லீவு விட்டுருவீங்களா பாஸ்?