ajith distribute the surprise food for children

அஜித் தன்னுடைய ரசிகர் மன்றத்தைக் கலைத்தாலும், அவருடைய ரசிகர்கள் அதனை நற்பணி மன்றமாக மாற்றி அதன் மூலம் ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு மையங்களுக்கு தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர். மேலும் கருவேல மரம் வெட்டுதல், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் போன்ற சமூக அக்கறை கொண்ட செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடி வருகின்றனரோ அதே போல் அவருடைய மனைவி ஷாலினி பிறந்த நாள், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் பிறந்த நாளையும் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இப்படி விழுந்து விழுந்து உதவிகள் செய்யும் ரசிகர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும் அஜித் மறைமுகமாக உதவிகள் செய்வார் என கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அவரால் உதவி கிடைத்த யாரும் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அதனை வெளியே சொன்னதில்லை.

இந்நிலையில், நேற்று கொண்டாடப்பட்ட அஜித் மகள் அனோஷ்காவின் பிறந்த நாளுக்காக அஜித் தன்னுடைய வீட்டில் பிரியாணி செய்து அதனை, நீலாங்கரையில் அமைந்துள்ள குழந்தைகள் நல வாழ்வு மையம் ஒன்றுக்கு அனுப்பி வைத்தாராம். அஜித்திடம் இருந்து இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மையத்தின் நிர்வாகி மிகவும் நெகிழ்ச்சியுடன் இந்தச் செய்தியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தன் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது, இன்று இரவு அஜித்தின் வீட்டில் இருந்து பிரியாணி வந்துள்ளது. இத்தனை நாள் அஜித் பல்வேறு உதவிகளை செய்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறோம் ஆனால் அது எங்களுக்கே நடந்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் குழந்தைகள் நல வாழ்வு மையம் பற்றி நன்கு அறிந்த, பெண்ணின் தந்தை ஒருவர் அஜித்திடம் வேலை செய்வதாகவும், அவர் மூலம் அஜித்திடம் இந்தக் குழந்தைகள் நல வாழ்வு மையம் பற்றி தெரியப்படுத்தியதால் உடனே அஜித் தன்னுடைய மகள் பிறந்த நாளுக்காக அங்கு பிரியாணி செய்து அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனால் அந்த பெண்ணுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம் நன்றி தெரிவித்துத்துள்ளார் அந்த நிர்வாகி.