மதுரையில் நடிகர் அஜித்தை (Actor Ajith) புகழும் விதமாக அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் (Ajith). இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வலிமை (Valimai) திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் மதுரையில் நடிகர் அஜித்தை புகழும் விதமாக அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் “வருடங்கள் கடந்தாலும் வலிமையும்... வரலாறும் அழியாது என்ற வாசகங்களோடு அடங்காத அஜித் குரூப்ஸ் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

மேலும் அந்த போஸ்டரில் நடிகர் அஜித்தின் உருவத்தை சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் போல சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர் மதுரையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நடிகர் அஜித் இதுபோன்ற விஷயங்களை விரும்பாத நிலையில், அவரது ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டியிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகியுள்ளது.
