கமலின் 65 வது பிறந்தநாள் மற்றும் 60 வது ஆண்டு கலையுலக சாதனையை முன்னிட்டு நடந்த இளையராஜா இசை நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு கலந்துகொண்டிருந்த நிலையில் அந்நிகழ்ச்சிக்கு அஜீதி விஜய் இருவருமே கலந்துகொள்ளாதது சர்ச்சையாகியுள்ளது.

நேற்று மாலை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அந்நிகழ்வில் ரஜினிகாந்த், சிவக்குமார், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பார்த்திபன், விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, வடிவேலு, விக்ரம் பிரபு, நடிகைகள் லதா, ஸ்ரீபிரியா, மீனா, ரேகா, ராதா, அம்பிகா, மனிஷா கொய்ராலா, தமன்னா, லிசி, குட்டி பத்மினி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஷங்கர், மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சேரன், அமீர்,பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.,  

இவ்விழாவில் கலந்து கொள்ள விஜய் மற்றும் அஜீத் ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது.ஆனால் இருவருமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அது குறித்து இருவர் மீதும் வலைதளங்களில் பொது மக்கள் விமர்சித்து வந்தனர். கமல் போன்ற ஒரு மாபெரும் கலைஞனைக் கவுரவிக்கும் விழாவில் கூட கலந்துகொள்ளமாட்டீர்களா? என்ற கேள்வி எழுந்தது.

 அதைக்கண்டு விஜய், அஜீத் இரு தரப்புமே மவுனம் சாதித்த நிலையில்,  லோகேஷ்கனகராஜ் இயக்கும் ’விஜய் 64’படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் இவ்விழாவில் விஜய் கலந்துகொள்ளவில்லை என்று அப்படத்தைத் தயாரித்திருக்கும் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அஜீத் தரப்பிலிருந்தோ அவரது ‘வலிமை’பட வட்டாரத்திலிருந்தோ எவ்வித விளக்கமும் வரவில்லை. ஆனால் விழாவில் கலந்துகொள்ள ஆர்வமாகவே இருந்ததாகவும் அவரது தந்தை உடல்நலக் குறைவால் அவதிப்படுவதால் கடைசி நேரத்தில் அவர் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது.