வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நடிகர் அஜித்தை தொடர்ந்து இயக்கி வருபவர் சிவா. அதுவம் தற்போது சிவா இயக்க்த்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. திரையரங்குகளில் பெண்கள், குழந்தைகள் என கூட்டம் அலை மோதுகிறது. அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் அஜித் சிகரெட் பிடிக்கல… தண்ணி அடிக்கல… பெண்களை கிண்டல் பண்ணல… படத்தில் சிறிதளவு கூட ஆபாசமில்லை… ஏன் திரையில் அஜித் பைக் ஓட்டும் காட்சியில் கூட ஹெல்மெட் அணிந்துதான் நடித்துள்ளார்.

இவ்வளவு டீசண்ட்டா ஒரு படம் சமீபத்தில் வந்ததில்லை என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் சிவா ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று படங்களூககுப் பிறகு  நான்காவதாக அஜித்தை வைத்து விஸ்வாசத்தை இயக்கியுள்ளார். நான்காவதாக இருவரும் இணைந்தபோது அஜித் ரசிகர்களே சலிப்படைந்து போயினர் என்பது உண்மை.

ஏனென்றால் விவேகம் படம் அடைந்த தோல்வியை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தோல்விப் பட இயக்குநருடன்  அஜித் ஏன் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் கோபப்பட்டனர்.

ஆனால் அதற்கும் ஒரு மனிதாபிமான காரணத்தைச் சொன்னார் அஜித். என்னை வைத்து சிவா  தொடர்ந்து மூன்று படங்களை இயக்கியுள்ளார். அவர் என்னை விட்டு பிரிந்து போகும்போது ஒரு தோல்விப்பட இயக்குநராக போகக் கூடாது, ஒரு வெற்றிப்பட டைரக்டராகத் தான் போக வேண்டும், அதனால் தான் அவரது படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டேன் என தெரிவித்தார். அஜித்தின் நல்ல மனசை அனைவரும் பாராட்டினர்.

தற்போது விஸ்வாசம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் நடிக்கிறார், சதுரங்க வேட்டை வினோத் இயக்குகிறார்.

இந்நிலையில் தன்னிடம் ஒரு நல்ல சரித்திரக் கதை இருப்பதாகவும், அதில் அஜித் மீண்டும் நடிக்க உள்ளதாகவும் சிவா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதுவரை இல்லாத வேறு லெவல் படமாக அது இருக்கும் எனவும் சிவா தெரிவித்துள்ளார்.