தமிழ் சினிமாவில், உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவர் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், இவரை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர், லட்ச கணக்கான ரசிகர்கள்.

கடந்த 10  வருடங்களாக, ஊடகங்கள் மற்றும் எந்த தொலைக்காட்சிக்கும் பேட்டி கொடுப்பதை இவர் முழுமையாக தவிர்த்து விட்டார். அதே போல் வருடத்திற்கு ஒருமுறை பத்திரிக்கையாளர்களுக்கு தவறாமல் வைக்கும் பார்ட்டியையும் ஒரு சில காரணங்களால் தவிர்த்து விட்டார். 

எனினும், அஜித்தை சந்தித்து ஒரு புகைப்படமாவது எடுக்க முடியுமா என ஏங்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.

அதே போல் அஜித்தை வெளியில் சந்திக்கும் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பினால், அவர்களை தவிர்த்து விடாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வார். மேலும் படப்பிடிப்பின் போது ரசிகர்கள் சந்திக்க வந்தாலும் அவர்களை சந்திப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில் இவர் பிரபல தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு, பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டியில்... பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் எதார்த்தமாக பதில் கூறியுள்ளார்.

படிக்கும் போது என்னவாக ஆசை பட்டீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு? 

பள்ளியில் படிக்கும் போது தனக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஆட்டோ மொபைல் இன்ஜினீரிங் கற்றுக்கொள்ள வேண்டும், ஒர்க் ஷாப் வைக்க வேண்டும் என நினைத்ததாகவும், பின் சென்னை மோட்டார்ஸில் பணியில் சேர்ந்தேன், அது வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்கவில்லை. 

அதனால், கார்மெண்ட் ஒன்று ஆரம்பித்தேன் என கூறியுள்ளார். சினிமாவிற்குள் தான் வந்தது எதிர்பாராமல் நடந்தது என்றும், மேலும் அப்போதே கண்டிப்பாக சொந்தமாக கார்மெண்ட் ஒன்று ஆரம்பித்து எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் என தனக்கு விருப்பம் உள்ளதாக தன்னுடைய ஆசையாய் வெளிப்படுத்தியுள்ளார் தல.

இதை தொடர்ந்து... அஜித்தை முழு கதாநாயகனாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ஆசை படம் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது... 

'ஆசை' மற்றும் 'காதல் கோட்டை' போன்ற வெற்றி படங்களின் பெருமை இயக்குனர்களை மட்டும் தான் சென்றடையும். அவர்கள் தான் கதையை உருவாக்கி, கதாப்பாத்திரத்தையும் உருவாக்கி வெற்றியை கொடுக்கிறார்கள். எனவே அவர்களுக்கு தான் முழு பாராட்டுக்களும் சென்றடைய வேண்டும் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, அஜித் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான ஐந்து படங்களும் தோல்வி அடைந்தது குறித்து கேள்வி எழுப்பட்டதற்கு பதில் அளித்துள்ள அஜித்.

1997 ஆம் ஆண்டு வெளியான 'உல்லாசம்', 'பகைவன்', 'ரெட்டைஜடை வயசு', 'நேசம்', ராசி' ஆகிய படங்களின் கதைகளை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டது தான் இந்த படங்கள் தோல்வியடைந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது. ஆனால் மிகப்பெரிய வெற்றி பெற்ற'ஆசை' , 'காதல் கோட்டை' போன்ற படங்களின் கதையையும் கேட்காமல் தான் நான் ஒப்புக்கொண்டேன்.

ஒரு படம் வெற்றி என்னும் போது அந்த வெற்றி எப்படி இயக்குனரை சென்றடைகிறதோ.. அதே போல் தோல்விக்கும் அவர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நான் கதையை கேட்கவில்லை என்றாலும், இந்த படத்தை இரண்டு மூன்று கோடி ரூபாய் செலவு செய்து தயாரிக்க ஒப்புக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் கேட்டிருப்பார், இயக்குனரும் பிடித்து தான் எடுத்திருப்பார். எனவே நான் ஒரு சாதாரண நடிகன் தான் படத்தின் தோல்வி இயக்குனரையே சேரும் என தெரிவித்துள்ளார் அஜித்.