அஜீத்,ஹெச்.வினோத் போனி கபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணையும் ‘தல 60’படத்தின் வில்லன் யார் என்பது குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதில் முதல் முறையாக இந்தி சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜய் தேவ்கன் வில்லனாக நடிக்கவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘நேர்கொண்ட பார்வை’ரிலீஸாகி 4 வாரங்கள் கடந்திருக்கும் நிலையில் படம் இன்னும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் பெரும் லாபத்தை ஈட்டியிருக்கும் படமாக இப்படம் அமைந்திருக்கும் நிலையில், இதே கூட்டணியின் அடுத்த படம் இன்னும் இரண்டு மடங்கு பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது. அஜீத் பைக் ரேஸராகவே நடிக்கவிருக்கும் அந்த அதிரடி ஆக்‌ஷன் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் தனது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கருகரு முடியுடன் களம் இறங்குகிறார்.

இப்படம் குறித்த இன்னொரு ஆச்சரியமான செய்தி படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருக்கிறது என்பது. ஒரு கம்பீரமான வெற்றி கொடுத்ததால் இயக்குநர் வினோத் கேட்கும் அத்தனை சவுகர்யங்களையும் படத்துக்கு செய்து தருவதாக உத்தரவாதம் அளித்திருக்கும் போனிகபூர் வில்லன் வேடத்துக்கு அஜய் தேவ்கனைக் கேட்க முடியுமா என்றபோது சற்றும் யோசிக்காமல் ஓ.கே.சொல்லியிருக்கிறாராம். தமிழ்ப்படங்கள் நடக்கும் திசையில் தலைவைத்துக்கூட படுக்கமாட்டேன் என்ற வித்யா பாலனையே கட்டித்தூக்கிக் கொண்டுவர முடிந்தபோது அஜய் தேவ்கன் தன் பேச்சைத் தட்டமாட்டார் என்பதில் அவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கையாம் போனிகபூருக்கு.