நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருந்த 'கனா' படத்தின் வெற்றிக்கு பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்து விட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்து இரண்டாண்டாவது இடத்தில் இவருடைய பெயர் தான் உள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், நடிக்க உள்ள  அடுத்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தற்போது இவர், விஜய்சேதுபதி நடிக்க உள்ள அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர் ஏற்கனவே, விஜய்சேதுபதியுடன் 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்துள்ளார். மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த படத்தை 'ஐரா' படத்தின் இயக்குனர் கே.எம்.சர்ஜூன்,  உதவியாளர் விருமாண்டி என்பவர் இயக்கவுள்ளார். 'ஐரா' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.