நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும், விளையாட்டு வீராங்கனையாக நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இது குறித்த தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

'காக்கா முட்டை'  படத்தின் மூலம், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், ரசிகர்களை மட்டும் இன்றி, ஒட்டு மொத்த பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

நிகழ்ச்சி தொகுப்பாளர், டான்சர், என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, பல சவால்களை கடந்து, இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில்,  நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்திருந்த 'கனா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக இவர் பட்ட கஷ்டங்களே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறப்பட்டது. 

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் 'சலீம்' படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு ஸ்போர்ட்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க உள்ளார்.ஏற்கனவே நிஜ குத்து சண்டை வீராங்கனை, நடிகை ரித்திகா சிங் நடிப்பில் 'இறுதி சுற்று' படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில்,  மீண்டும் இதே விளையாட்டை மையப்படுத்தி, தெலுங்கில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

அதிலும் நிஜ வீராங்கனையை ஓரம்கட்டி விட்டு, இயக்குனர் ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கில் படம் உருவாகி வந்தாலும்,  தமிழிலும் டப் செய்து வெளியிட பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.  நடிகர் உதயசங்கர் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் மட்டுமின்றி ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்த படம் என கூறப்படுகிறது. இந்த படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கிராமத்து பெண்மணியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.