சிரஞ்சீவி நடிக்க இருக்கும் வரலாற்றுப் படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கதாபாத்திரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ’கைதி நம்பர் 150’ படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்க இருக்கும் வரலாற்றுப் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த படம் ”உய்யலவாடா நரசிம்ம ரெட்டி” என்ற சுதந்திரப் போராட்ட வீரரின் கதை.

ஆதலால், படத்தில் சிரஞ்சீவிக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகை சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும் என படக்குழு இப்படியொரு முடிவெடுத்துள்ளது.

இது குறித்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போது வரை ஐஸ்வர்யா ராய் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

இந்தப் படத்திற்கு சம்மதம் தெரிவிப்பதன் மூலம், பல தெலுங்கு படங்களில் கெளரவ வேடங்களில் தோன்றிய ஐஸ்வர்யா ராய் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் இதுவாகவே இருக்கும்.

சிரஞ்சீவியின் படம் என்பதால், ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.