இயக்குநர் ப.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்கள் ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 5ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஞ்சித், சோழ மன்னர் ராஜ ராஜ சோழனை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது.  இதைத்தொடர்ந்து ரஞ்சித் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பபட்டன.

இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய ப.ரஞ்சித், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ரஞ்சித்தை சரமாரியாக விளாசியதோடு கைது செய்யவும் தடை விதித்தது.

இதுவரை இரண்டு முறை ப.ரஞ்சித்தை கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.  கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இயக்குநர் ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிக்க உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.ரஞ்சித் தரப்பு வழக்கறிஞர், 6ம் தேதி இயக்குநர் ப.ரஞ்சித் பேசிய நிலையில் 11ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜராஜசோழன் பற்றி இயக்குநர் ப.ரஞ்சித் பேசிய குறிப்புகள் தமிழக அரசு வெளியிட்ட புத்தகம் ஒன்றில் இருக்கிறது என வாதிட்டார். அப்போது நீதிபதி பாரதிதாசன், ‘’என்ன தான் பேச்சுரிமை இருந்தாலும் அதற்கு ஒரு வரைமுறையில்லையா? இயக்குநர் ப.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்கள் ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்ய வேண்டும்‘’ என உத்தரவிட்டு இருக்கிறார்.

ப.ரஞ்சித்துக்கு எதிராக விவான ஆவணங்கள், ஆதாரங்களை கேட்டுள்ளதால் அவர் மேலும் சிக்கலை சந்திக்கப்போவதாக கருதப்படுகிறது.