சமீப காலமாக நடிகர் விஜய்யின் படம் வெளியாகும் போதெல்லாம் கூடவே ஏதாவது பிரச்சனையும் தலை தூக்க ஆரம்பித்து விடுகிறது.  இதற்கு முன்னதாக நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கே சென்று அலேக்காக தூக்கிய வருமான வரித்துறையினர். சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பிகில் பட சம்பளம் தொடர்பாக ரெய்டு நடப்பதாக ஐ.டி. அதிகாரிகள் கூறினாலும், அதற்கு பின்னால் பல அரசியல் காரணங்கள் இருப்பதாக ரசிகர்கள் கொந்தளித்தனர். 

24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நெய்வேலி ஷூட்டிங்கிற்கு சென்ற விஜய்., ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து எல்லாம் தனிக்கதை. ஆனால் அந்த சோதனையின் போது கணக்கில் வராத கோடிக்கணக்கிலான சொத்துக்கள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவை அனைத்து வெளிநாடுகளில் இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. 

இந்நிலையில் இன்று மீண்டும் பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான லலித் குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலங்களில் நேற்று முன்தினம் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று அதன் தொடர்ச்சியாக விஜய்யிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.